ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

Su.tha Arivalagan
Sep 08, 2025,06:28 PM IST

துபாய்:  இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் நடக்கப்போகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த தகவலை கமல்ஹாசனே உறுதிப்படுத்தி இருக்கிறார். 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரையும் வைத்து தனித்தனியாக (விக்ரம் - பிளாக்பஸ்டர், கூலி -ஹிட்) படம் இயக்கிய பிறகு, இந்த கூட்டணி பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்தன. இந்த நிலையில் துபாயில் நடந்த SIMA விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசனிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது. அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ரஜினியும் நானும் ரொம்ப நாளாக சேர்ந்து நடிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தோம். இது வியாபார ரீதியாக ஒரு சர்ப்ரைஸாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இப்பவாவது இது நடக்குதே, சரி நடக்கட்டும் என்று இருக்கிறது. 


அதேசமயம், இது தரமான சம்பவம் மாதிரி இருக்குமான்னு சொல்ல முடியாது. அது ரசிகர்கள் கையில்தான் உள்ளது. அவர்களுக்கு பிடிச்சா நாங்க சந்தோஷப்படுவோம். படம் வரட்டும். படம் வர்றதுக்கு முன்னாடியே தரமான சம்பவம்னு சொல்லக் கூடாது.




அதே மாதிரி எனக்கு இது இன்னொரு வாய்ப்பு. நீங்க, நாங்க போட்டி போட்டு நடிப்போம்னு நினைக்கலாம். ஆனா நான் ரஜினியுடன் சேர்ந்து வேலை செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன். வேற ஒன்னும் இல்ல. இந்த முறை நாங்க சேர்ந்து வருவோம். நாங்க ஒருத்தர் படத்த ஒருத்தர் தயாரிக்கணும்னு எப்பவுமே நினைப்போம் என்றார் கமல்ஹாசன்.


லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். அதற்கு முன்பு கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கினார். இவர்தான் இந்த பிரம்மாண்டமான படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருந்தாலும், படம் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. பல வருடங்களாக இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். இப்போது அந்த ஆசை நிறைவேறப்போகிறது. ஆனால் இருவரும் பீக்கில் இருந்தபோது நடித்திருந்தால் இன்னும் மெகா சிறப்பாக இருந்திருக்கும். காலம் கடந்தாலும் கூட இவர்களுக்குப் பொருத்தமான சிறப்பான கதையை உருவாக்கி அந்த பார்முலாவும் ஒர்க் அவுட் ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பிளாக்பஸ்டராக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஷோலே போன்ற ஒரு படத்தை கமல், ரஜினி ரசிகர்கள் இருவருமே லோகேஷிடமிருந்து எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


கமல்ஹாசன் சொன்னது போல, இது சினிமா வியாபாரத்தில் ஒரு பெரிய சர்ப்ரைஸாகவும் இருக்கும். இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கும்போது, படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். "ரசிகர்கள் விரும்பினால், நாங்கள் சந்தோஷப்படுவோம்" என்று கமல் கூறியிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படம் இருக்கும் என்று தெரிகிறது.


லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே கமல், ரஜினி இருவரையும் வைத்து வெற்றி படங்கள் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்பலாம். ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இந்த படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.