இந்தியனாக பெருமைப்படுகிறேன்.. நாளை எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன் பெருமிதம்!

Su.tha Arivalagan
Jul 24, 2025,10:26 AM IST

டெல்லி: ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு இந்தியனாக இதை கெளரவமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் காலியான 6 ராஜ்யசபா எம்.பி பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் கமல்ஹாசன், பி. வில்சன், ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் திமுக கூட்டணி சார்பிலும், அதிமுக சார்பில் இன்பதுரை, எம். தனபால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது, எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. டெல்லியில் விரிவாகப் பேசுகிறேன். ஒரு இந்தியனாக இதைக் கெளரவமாக பார்க்கிறேன் என்று கூறினார் கமல்ஹாசன்.




அரசியல் தலைவராகவும், சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். சமீபத்தில்தான் அவரது  தக்லைப் படம் வெளியானது. தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், ஓடிடியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்3 படம் வெளியாகவுள்ளது.


தான் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது நண்பரான நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன் என்பது நினைவிருக்கலாம்.