திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
சென்னை: திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் (Certification Process) வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான காலக்கெடுவை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சென்சார் சிக்கல் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான கமல்ஹாசன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இத தொடர்பாக எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது பகுத்தறிவால் வழி நடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் வெளிப்படைத்தன்மையற்ற சூழலால் முடக்கப்படக்கூடாது. இந்த தருணம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றியது மட்டுமல்ல; இது ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தைப் பிரதிபலிக்கிறது.
சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல; அது எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில்கள் என பலதரப்பட்ட மக்களின் கூட்டு முயற்சி. இவர்களின் வாழ்வாதாரம் முறையான மற்றும் சரியான நேரத்தில் நடக்கும் ஒரு செயல்முறையை நம்பியே இருக்கிறது.
தெளிவற்ற நிலை நீடிக்கும்போது, படைப்பாற்றல் முடக்கப்படுகிறது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள சினிமா ரசிகர்கள் கலைகளின் மீது மிகுந்த ஆர்வமும், பகுத்தறியும் திறனும், முதிர்ச்சியும் கொண்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத்தன்மையையும் மரியாதையையும் எதிர்பார்க்கத் தகுதியானவர்கள்.
தற்போது தேவைப்படுவது என்னவென்றால், சான்றிதழ் வழங்கும் (Certification) நடைமுறைகளை கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்வதாகும். இதில் சான்றிதழ் வழங்குவதற்கான காலக்கெடு வரையறுக்கப்பட வேண்டும், மதிப்பீடு வெளிப்படையானதாக இருக்க வேண்டும், மேலும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு (Cut) அல்லது மாற்றத்திற்கும் முறையான எழுத்துப்பூர்வமான காரணங்கள் விளக்கப்பட வேண்டும்.
இது ஒட்டுமொத்தத் திரைத்துறையும் ஒன்றிணைந்து, அரசு நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடங்க வேண்டிய தருணம். இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும். மேலும், கலைஞர்கள் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.