Summer Special Foods: பழமொழி வடிவில் உணவுப் பழக்கம்.. உஷ்ணம் தவிர்க்கும் கம்பங்களி!

Swarnalakshmi
Apr 08, 2026,12:22 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

அடடா! அடடா! என்ன வெயில்..என்ன வெயில்.. நம் வீட்டை விட்டு வெளியே சென்று பிறகு வீடு திரும்பும் போது அனைவரும் கூறும் ஒரே வாக்கியம் இதுவே..

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லையே! தணிவதில்லையே! என்றும் புலம்புவோம் இல்லையா? அதற்கு ஏதாவது கூழ் போல் உட்கொள்ள வெயிலுக்கு இதமாக இருக்கும்.அதற்கு தகுந்தாற்போல் ஒரு பழமொழி இன்று பார்ப்போம்.

உஷ்ணம் தவிர்க்கும் கம்பங்களி

கோடை வெயில் வாட்டி வரும் வேளையில் உடலில்  பல மாற்றங்கள் ஏற்பட்டு அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. இதனால் நிறைய பாதிப்புகள் வருகிறது.எனவே  கம்பங் களியை   நன்றாக கூழ்  போல் செய்து மோர் சேர்த்து பருகிவர உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தவிர்க்கப்படுகிறது.

மேலும் கம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கம்பு: pearl millet என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இன்றைய காலங்களில் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவில் சிறு தானியங்களை சேர்த்து வருகின்றனர்.
அதில் கம்பு ஒரு விசேஷமான சிறு தானியம். கம்பில் இவ்வளவு நன்மைகளா!..



நோய் எதிர்ப்பு, செரிமானம்:

கம்பு பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவு.இதனை  களியாக  செய்து உண்பதால் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து,தசைகளுக்கு நல்ல இறுக்கம் தந்து, உடல் பலத்தை பெருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு திறன் மேம்பட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கும். சிறுதானிய கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும், நிறைந்துள்ளன.எளிதாக செரிமானம் அடையும் கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள்  இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் திறன் இந்த கம்பங்களிக்கு உண்டு.

இளமையான தோற்றம் :

கம்பு  உட்கொள்பவர்களின்  தோலில்  சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளபளப்பை தரும். இளமையான தோற்றம் தந்து முதுமை அடைவதை தள்ளிப்போடும்.ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால் இளமையாக இருக்க உதவுகிறது.

பெண்களுக்கு:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அடி வயிற்று வலியும், அதிக ரத்தப் போக்கும் இருக்கும்.கம்பங்கூழ் அல்லது களி சாப்பிட இந்த பிரச்சனை தீரும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் இதனை உட்கொண்டால் அதிக தாய்ப்பால் சுரக்கும். இளஞ்சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.

குடல் புற்று ஏற்படுவதை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மை செய்கிறது.இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.முடி கொட்டாமல் இருக்க 'கெராட்டின்' என்னும் புரதம் அவசியம். இது கம்பில் அதிகமாக உள்ளதால் கம்பு உட்கொள்ள முடி  உதிரும் பிரச்சனை குறைகிறது.

நீரிழிவு : (டயாபடீஸ் )

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல ஃபில்லிங்கான உணவு. உடலில் அதிக சக்தி தரவல்லது அரிசியை விட கனிமம், புரதம், கால்சியம்,இரும்பு, உயிர்சத்து அதிகம் உள்ள தானியம் கம்பு. நீரிழிவு  நோயாளிகள் கம்பு சேர்த்து தோசை வார்த்து உட்கொள்ளலாம். 

வளரும் குழந்தைகளுக்கு நன்றாக நைசாக அரைத்த கம்பினால் செய்த  கூழ்  கொடுக்க நரம்புகளுக்கு புத்துணர்வு தருகிறது. சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

ஆரோக்கியமான இதயம்:

இதில்  லிக்னின்  , மெக்னீசியம், பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்த சோகையை வெல்லும்.பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கிறது.

குறிப்பு: நாட்டுக்கம்பு பயன்படுத்துவது சிறப்பு.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும் கம்பங்களி செய்து உட்கொள்ள ரெடியா?..

மேலும் இது போன்ற சுவாரசியமான உணவு சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.