அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
Aug 31, 2026,11:17 AM IST

 நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணத்தின் விவரத்தைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.பிரதாப் (IAS) அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


'Personal Cash Register' கட்டாயம்:

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசுத் துறைகளின் அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் தினமும் அலுவலகத்திற்கு வரும் போது தங்களது கையில் வைத்திருக்கும் சொந்த ரொக்கப் பணத்தின் விவரத்தை "Personal Cash Register" (தனிநபர் ரொக்கப் பதிவேடு) என்ற பிரத்யேகப் பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.


பராமரிப்பு மற்றும் மேலாண்மை:




வருகைப் பதிவேட்டுடன் இணைப்பு: இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் (Head of Office) ஒப்புதலைப் பெற வேண்டும்.


பாதுகாப்பான பராமரிப்பு: அலுவலகத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அலுவலகக் கண்காணிப்பாளரால் (Supervisor) இந்த பதிவேடு பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.


மாதத்திற்கு 2 முறை கள ஆய்வு (Bi-monthly Inspection):

அலுவலகத் தலைவர்களின் மேலதிகாரிகள் (Higher Officials) மாதம் இருமுறை (Bi-monthly) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வின் போது, "Personal Cash Register" முயற்சியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும், அதில் உள்ள விவரங்களின் துல்லியத்தையும் கள ஆய்வு செய்து உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


விதிமீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை:

இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டாலோ அல்லது பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினாலோ கடுமையாகப் பார்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், பதிவேட்டைப் பராமரிக்கும் கண்காணிப்பாளர்,வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் ஆகியோர் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (Departmental Disciplinary Action) எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தனது சுற்றறிக்கையில் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்.


பின்னணி & நோக்கம்:

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (Vigilance and Anti-Corruption) திடீர் சோதனை நடத்தும் போது, பல நேரங்களில் கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்படுகிறது. அத்தகைய நேரங்களில் அது ஊழியர்களின் "சொந்தப் பணம்" என சாக்குப்போக்கு கூறுவதைத் தவிர்க்கவும், அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு, கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதே வேளையில் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.