இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!

Su.tha Arivalagan
Oct 05, 2026,11:19 AM IST

- கலைவாணி கோபால்


"சிவாய நம"


இந்து தர்மத்தில் ஆண் ,பெண் என்ற வேறுபாடே இல்லை என்பதை மிக தெளிவாகவும், தீர்க்கமாகவும், சொல்லக்கூடிய வரலாறு தான்,.. நம் காரைக்கால் அம்மையாரின் வரலாறு.


சோழ நாட்டில் உள்ள காரைக்காலில்  வணிகர் தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்  புனிதவதி என்கின்ற காரைக்கால் அம்மையார். (தத்தம் என்றால் 'தனித்து வியாபாரம் செய்பவன் 'எனப் பொருள் 'தத் 'எனும் வார்த்தைக்கு பரிபூரணமானது.)


விசாகப்பட்டினம் தொடங்கி தென்னக குலசேகரப்பட்டினம் வரை…  கடல் போக்குவரத்து  இருந்ததால், இவர்களின் வாணிபமும் மிகச் சிறப்பாகவே இருந்தது.


தனதத்தனுக்கு செல்வத்துக்கு ஒன்றும் குறைவில்லை. அவரின், மகள் சிறு வயது முதலே பேருக்கு ஏற்றாற்போல்  புனிதமான தனிப்பெரும் பண்பு கொண்டு ...சிவன் மேல் அதிக பக்தி செலுத்தி காலையில் சிவ பூஜை முதற்கொண்டு , கோயிலுக்கு செல்வது வரை எல்லா வழிபாடுகளையும், மிக சிறப்பாக செய்து வந்தார்.


அப்படி, அவரின் வாழ்க்கை முறை சென்று கொண்டு இருந்த வேளையில்.... அவர் பருவ வயது அடைந்த நிலையில் தனதத்தனுக்கு பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமண முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் புனிதவதி  அம்மையாரின் பக்தியினை கொண்டு கொஞ்சம் மனதுக்குள் அவருக்கு கலக்கமும் இருந்தது. 




அதையும் தாண்டி ஒரே பெண்ணான புனிதவதியாரை மறு இடத்திற்கு அனுப்பாமல் மாப்பிள்ளை தன் வீட்டிலேயே இருக்கும்படி மணமகனை தேடினார். புனிதவதியாருக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றாலும் கூட... தந்தையின் மனக்கலக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க, தன்னுடைய சிவ பக்தியினை தாண்டி தந்தையின் மனது மகிழ்விக்கும் எண்ணம் கொண்டு திருமணத்திற்கும் புனிதவதியார் சம்மதித்தார்.


தனதத்தன் எதிர்பார்த்தபடி நாகப்பட்டினத்தில் பெரும் வணிகராக இருந்த பரமதத்தன் எனும் மாப்பிள்ளையை மகளுக்கு பேசி முடித்தார். புனிதவதியாரை காரைக்காலிலேயே குடி வைத்து மருமகபிள்ளைக்கும் அனைத்து வணிகங்களையும் சொல்லிக் கொடுத்து பரமதத்தனையும் பெரும் வணிகராக மாற்றினார்.


புனிதவதியாரின் வாழ்க்கையும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் பெருமானின் கருணை விளையாட்டு தொடங்க ஆரம்பித்தது. 


புனிதவதியார்  வீட்டிலேயே இருந்தாலும்கூட தனது இல்லத்திற்கு வரும் சிவனடியார்களை உபசரிப்பதும், அவர்களுக்கு உணவு அளிப்பதும், அவரின் கடமையாக கொண்டு பணி செய்து வந்தார்.


அப்போதுதான் ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்தது. பரம தத்தன் வணிகத்தில் ஈடுபட்ட வந்த நேரத்தில் அவருக்கு உயர் ரக இரண்டு  மாம்பழங்கள் கிடைத்தன. அதை அங்கு வேலை செய்யும் ஆட்கள் மூலமாக வீட்டிற்கு அந்த இரண்டு  மாம்பழங்களையும் அனுப்பி வைத்தார்.


அம்மையாரும் அதைப் பெற்றுக் கொண்டு அவர் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,

வாசலின் முன் ஒரு சிவனடியார் வந்தார். சிவனடியாரை கண்ட அம்மையார் அவரை, உபசரித்து வரவேற்று நீறு கொடுத்து உணவு சாப்பிட அழைத்தார்.


அப்போது , உலையில் சாதம் மட்டுமே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த உணவுடன் தயிர் சேர்த்து , பரம தத்தன் அனுப்பியிருந்த ஒரு மாங்கனியினை சேர்த்து  அவருக்கு உணவு பரிமாறினார்.


பின்பு மதிய உணவுக்கு பரமதத்தன் வீட்டிற்கு வந்தார். உணவு பரிமாறப்பட்ட போது.... இரண்டு மாங்கனிகளில் ஒன்றை ஏற்கனவே, சிவனடியாருக்கு வைத்த நிலையில் மீதி ஒன்றை பரமதத்தனுக்கு வைத்தார். அதை உண்ட பரமதத்தன் அதன் ருசி மிகவும் அருமையாக இருந்ததால், திரும்பவும் அடுத்த மாங்கனியும் கேட்டார்.


புனிதவதியாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல், எம்பெருமான் முன்பு நின்று  முறையிட்ட வேளையில் அவரின் கைக்கு ஒரு மாங்கனி வந்தது . அதை சிறிதும் யோசிக்காமல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமதத்தனுக்கு சிவபெருமான் அருளால் கிடைத்த அந்த மாங்கனியையும் கொண்டு வந்து பரிமாறினார்.


அதை உண்டு கொண்டிருந்த பரமதத்தனுக்கு அதன் ருசியில் வேறுபாடு தெரிந்தது. அதனால் ,அவரின் சந்தேகத்தை புனிதவதியாரிடமே கேட்டார். சிவத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த புனிதவதியாருக்கு பொய் சொல்ல வராது அல்லவா !  அதனால், அவர் ,நடந்ததை கணவரிடம் தெரிவித்தார். அதை நம்ப முடியாமல் இருந்த புனிதவதியாரின் கணவர் .திரும்பவும் வேறு ஒரு மாம்பாழத்தை தன் கண்ணெதிரில் சிவபெருமானிடம் கேட்டு பெறுமாறு கூறினார். அம்மையாரும் பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் முறையிட திரும்ப ஒரு மாங்கனி அம்மையாரின் கைக்கு கிடைத்தது.


அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பரமத்தன்  தெய்வப்பிறவிக்கு நிகரான ஒரு பெண்ணை நாம் திருமணம் செய்து அவரை வேலைக்காரியை போல்  நடத்தியது கண்டு தன் மனதிற்குள் பெரும் அச்சம் கொண்டார். என்ன செய்வது என்று தெரியாமல் , சில நாட்கள் கடந்த நிலையில் வியாபாரத்திற்கு வெளியூர் செல்வதாக  புனிதவதியாரிடம் கூறி வெளியூர் வணிகத்திற்கு சென்றார்.


அக்காலங்களில் வணிகத்திற்கு அடிக்கடி வெளியூர் செல்வது இயல்பு. அதனால், புனிதவதியாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல ஆண்டுகள் கழிந்த நிலையில் பரமத்தத்தன் வருவான் என நம்பிக் கொண்டிருந்த  புனிதவதியாருக்கு  ஒரு செய்தி வந்தது. பரமதத்தன் வேறொரு திருமணம் முடிந்து, ஒரு பெண் குழந்தையுடன் குடும்பம் நடத்தி வருவதாக சுற்றத்தார் மூலம் தகவல் வந்தது.


சுற்றத்தார் மூலம் தகவல் வந்தவுடன் புனிதவதியார் குலசேகரன் பட்டினத்துக்கு ஓடினார். ஏனென்றால் ,அங்கு தான் பரமதத்தன் வசித்து வருகிறார். பரமதத்தன் வீட்டை அடைந்தார் புனிதவதியார். அம்மையாரை கண்ட பரமதத்தன், அவர் மனைவி, மற்றும் குழந்தை ஆகிய மூவரும் புனிதவதி  அம்மையாரின் காலில் விழுந்து வணங்கினர். என்ன செய்வது? சொல்வது? என்று தெரியாமல், திகைத்து நின்றார் புனிதவதியார் 


அம்மையாரை கண்ட பரமதத்தன் உன்னுடன் வாழும் அளவுக்கு தகுதிகள் யாம் பெறவில்லை . நீங்கள் தெய்வ பிறப்பு  நீங்கள் சாதாரண பெண் இல்லை என்றும் அதனால்தான் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். பரமதத்தன் தன் மகளை அழைத்து புனிதவதி அம்மையார் காலில் விழுந்து ஆசி பெற சொன்னார்.


அவர் மகளை புனிதவதி என்று அழைத்தது அம்மையாருக்கு மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. எவருடைய வாழ்க்கையிலும் கட்டாயப்படுத்தி வாழ முடியாது என்று நிலைமையை புரிந்து கொண்டு அம்மையார் அவ்விடத்தை விட்டு அங்குள்ள சிவாலயத்திற்குச் சென்றார்.


குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள பெருமானிடம் கணவனுக்கு இல்லா இந்த உடல் பொலிவு வேண்டாம் என கேட்டு பேய் உருவம் வாங்கினார் ("பேய் உருவம்" என்றால் பேயாக மாறுவது அல்ல... 'பேய்' என்றால், பெரிய, முதிர்ந்த என்று ஒரு பொருள் . பேய் மழை, பேய் கரும்பு, பேயாழ்வார்.... என்பதெல்லாம் அப்படிதான் அக்காலத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் ( இங்கு பேய் என்பதை நாம் தீய சக்தியாக இருக்கும் ஒரு சக்தியை நாம் சித்தரிக்க வேண்டாம்) 


பெரிய பிம்பங்களையும் பெரிய சக்திகளையும் உடையது என்று பொருள்படும். நம் அம்மையாரும் அதுபோல மிகவும் முதுமையான ஒரு கோலத்தை பெருமானிடம் பெற்றார். சுருக்கமாக சொன்னால் இளமைப் பருவமாக வாழ்க்கையை தொடங்க வேண்டிய பருவத்தை முற்றிலுமாக கடைசிப் படியாக அமைந்துள்ள முதுமைக்  கோலத்தை பெற்றார்.


தனது வாழ்க்கையில் கடந்து வந்த ஒவ்வொரு படி நிலைகளையும் , நினைத்து பெருமான் தன்னை ஆட்கொள்ளவே செய்த  செயல்கள் என்பதை அறிந்து இனி என் உருவம் "யாருக்கு வேண்டும். என் மனது இறைவன் நோக்கினால் போதும்" என ஞானம் கொண்டு தன்னை முழுமையாக சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார்.


மாளிகையில் குடிகொண்டு, வைரக் கட்டிலில் உறங்கி, தங்க தட்டில்  உண்டு , ஆயிரம் சேவகர்கள் சூழ வாழ்ந்தவர் அம்மையார். அவர் நினைத்திருந்தால் பரமதத்தனை அன்றி, வேறு திருமணம் முடித்து வாழ்ந்திருக்க முடியும். அவ்வளவு செல்வங்கள் அவரிடம் இருந்த போதும், பக்தி நிலை மிகுதியால் இறைவனின் திருவிளையாடல்களை நினைந்து தன்னை இறுதியாக இறைவனிடமே ஆட்படுத்தி ஞானம் என்னும் நிலையை அடைந்தார்.


என்னென்ன தலங்களுக்கெல்லாம் செல்கிறாரோ? அந்தந்த தலங்களில் உள்ள சிவ ஆலயங்களை தரிசித்து அங்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தார். அப்படி பாடப்பட்ட பாடல்கள்  தான் இரட்டை மணிமாலை ,அற்புத திருவாந்தாதி, மற்றும் மூத்த திருப்பதிகம் என்ற இன்னொரு நூலும்.


"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியை சேர்ந்தேன்- நிறந் திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பதிடர்". என்று  அவர் பாடிய திருவந்தாதி தன் இடர் எப்போது தீரும் என்பதை புலம்பும்படியாக சொல்லப்படுகிறது.


இறுதியாக இறைவனை அடையும்போது மட்டுமே நம் இடர் தீரும் என்று வாழ்வினை வெறுத்து சிவனுடன் கலக்க எண்ணி சிவனை காண கைலாயம் நோக்கி நடந்தார். மலையின் முக்கிய இடத்தை அடையும்போது சிவன் வாழும் மலையில் தன் கால் படுவதா? என மனம் வாடி கையாலும், தலையாலும் , சென்றார் புனிதவதியார். கைலாயம் நோக்கி வருவதைக் கண்ட சிவபெருமான் "என் அம்மையே" என அவரை அழைத்தார். 


தாய் ,தந்தை, இல்லா அநாதி பெருமான். புனிதவதியாரை நோக்கி 'அம்மையே" என்று அவரை அழைத்து இருவரும் அன்பு உணர்வோடு கலந்து நின்றனர். தன்னை'  அம்மை' என அழைத்த அன்பில்  உருகி நின்றார் புனிதவதியார். 


இறைவனுக்கே தாயாகும் யோகம் யாருக்கு வாய்க்கும்? அப்பெரும் பேறு பெற்றவர் காரைக்கால் அம்மையார். அந்நொடியே அம்மையார் சிவனில் கரைந்து சிவனுக்கு அம்மையாகி நின்றார். கயிலை நாதனும்" என் தாயே உனக்கு என்ன வேண்டும்? என கேட்க,


"இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் 

உன்னை என்றும் மறவாமல் வேண்டும்

இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 

அரவா நீ ஆடும் போது அடியின் கீழ் இருக்க என்றார்" என்று  சிவனின் உருகி பாடினார்.


தாயார் கேட்டு எந்த மகனாவது அதை தராமல் இருப்பாரா? அதிலும் நம் பெருமான் அன்பே வடிவில் உள்ள பெருமான்..... அப்பேரினை அப்போதே அம்மையாருக்கு  வாழங்கினார். அம்மையார் கேட்டது மகா அபூர்வமான காட்சி, தேவர்களும், ரிஷிகளும் ,பலர் யோகிகளுக்கும், தவ வலிமை மிக்கவர்களுக்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி. தன்னை தேடி தவம் இருந்த யாருக்கும் தராத ஒரு காட்சி ..... பெருமான் தன் தாய்க்கு காட்ட முடிவு செய்தார்.


அது என்ன காட்சி?  சிவ நடனமும், விஸ்வரூபமும், ஒன்று சேர  சிவனடியார் ஆன காரைக்கால் அம்மையாருக்கு திருவாலங்காட்டில் தன் நடனத்தை  காண சித்தம்  கொண்டு திரு ஆலங்காட்டில் வர வைத்தார் புனிதவதியாரை. ஏன் கயிலாயத்தில் சிவன் நடனம் புரியாமல் திருவாலங்காட்டிற்கு வரச் செய்தார் என்றால்.... திருவாலங்காடு பூமி ஒரு தத்துவத்துக்கு உட்பட்டது. என்னவென்றால்? பரிதவிக்கும் ஆன்மாக்களை ஈர்க்க.... ஈர்த்து அவர்களின் உண்மை நிலையை விளக்கி அவர்களின் அமைதிக்காக ஏற்படுத்தப்பட்ட தலம்' திருவாலங்காடு.'


பூமியில் வாழும் மானிடர்களின் ஆத்மா... ஒரு மாயையில் சிக்கி ஆசையும் ,மோகமும், வெறியும் கொண்டு, நோயிலோ, விபத்திலோ, இல்லை தற்செயலாகவோ, கொலையாகவோ, போராகவோ இறக்கும்பொழுது அந்த மாயை அந்த ஆன்மாவினை விடாது.


அப்படிப்பட்ட ஆன்மாக்கள் உடனே மறுபிறவி எடுக்காமல் ,ஆசை வெறியுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் .அந்த ஆன்மாவும் கடவுளை அடைய வேண்டும் என்பதை நினைத்து பூலோகத்தில் விட்டு விட்ட ஆசைகளுக்காக ஏங்கித் தவிக்கும் ஆன்மாக்களை , மாயையில் இருந்து நீக்கி தன்னை இயக்கியது மிகப் பெரும் சக்தி என்பதை உணர்ந்து  கொள்ள சிவன் சுடுகாட்டில் ஆடப்படுகின்ற ஆட்டம் தான் .….இங்கு அம்மையாருக்கு திருவாலங்காட்டில் நடத்தப் பெற்ற நடனம். சாந்தி அடைய ஆத்மாக்களை தன்னுடன் ஈர்த்து இணைக்கும் தலம் திரு ஆலங்காடு இது பிரபஞ்ச சக்தி தத்துவத்தின் அடையாளமாக உள்ளதால் அம்மையாரை மானிட உடலோடு அல்லவா சந்தித்தார். அதனால் ,திரு ஆலங்காட்டில் மானிட உடலில் இருந்து நீக்கி அவரை கைலாயத்திற்கு கொண்டு வந்தார். (திருவாலங்காடு அம்மையார் முத்திக்கான அழைப்பு பெற்ற நலம் ஆகும்.)


அந்த திரு ஆலங்காடு ரத்தின சபையில் தன் தெய்வீக சிவ நடனத்தை அவருக்கு காட்டி பிறப்பின் நோக்கமும், முற்பிறவியும் இப்பிறவியில் இறையருள் தனக்கு தொடர்ந்து வந்த காரணமும், சிவன் தன்னை தேர்ந்தெடுத்த.... எல்லா காரணமும் அம்மையாருக்கு விளங்கிற்று. சிவனடியார் உருவில் வந்ததும் சிவனே என்பதும் அம்மையருக்கு புரிந்தது.


ஒருவேளை பரம தத்தனுடன் வாழ்ந்து கொண்டு குழந்தைகள் பெற்று வளர்த்திருந்தால் இந்த யோகம் கிடைத்திருக்குமா? என்று வியந்து நெருப்பில் இட்ட பொன் போல் மாசு நீங்கி மனம் சிவனில் கரைந்து முக்தி அடைந்தது அம்மையாரின் ஆன்மா. 


சிவபெருமான் நடனம் ஆடும் போது கூடவே இருக்கும் வரம் அவருக்கு அருளப்பட்டதால், பல  நடராஜர் கற் சிற்பங்களில் ஒருபுறம் காரைக்கால் அம்மையார் உருவமும் காட்சி  படுத்தப்பட்டுள்ளது. இப் பேறு யாருக்கு வாய்க்கும்?


அதேபோல 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் இவர் மட்டுமே... தாய் எனும் ஸ்தானம் பெற்றவரும் புனிதவதி அம்மையார் மட்டுமே., காரைக்காலில் பிறந்து ,குலசேகரன் பட்டினத்தில் பேய் உருவம் வாங்கி, திருவாலங்காட்டில் முக்தி அடைந்தவர் அம்மையார்.


காரைக்கால் அம்மையார் வாழ்ந்து எத்தனையோ நூறு ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால், அவர் இக்காலத்திலும் பேசப்படுகின்றார் . இதற்கு காரணம் அவர் இறைவனிடம் கொண்ட அன்பு மட்டுமே. காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் இன்னொரு சுவையான நிகழ்வு உண்டு. சிவனே முழுமுதல் கடவுள் என வழிப்பட்ட அவர் உமையவளை கண்டுகொள்ளவில்லை. உமையவள் சிவனின் அடக்கம் என்பது அவரின் நம்பிக்கை. கயிலையிலும் அம்மையார் உமையவளை கண்டறியவில்லை.


திருவாலங்காடு நோக்கி நடக்கும் போது வழி தெரியாமல் திணறிய போது காளி வந்து வழிகாட்டி தானும் சிவ வழிபாட்டில் முக்கியம் என்பதை காரைக்கால் அம்மையாருக்கு எடுத்துரைத்தார். அன்னையினை வழிபட்டால் வழிகாட்டுவார் என்பதை உணர்ந்து வழிகாட்டும் காளி என பெயரிட்டு உமையவளையும் வணங்கினார். இப்போதும் திருவாலங்காடு தலம் அருகே அத்தலமும்  உண்டு. 


காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் திருவாலங்காடு உட்பட்ட பல ஆலயங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் அடியாருக்கு அம்மையார் தயிர் சோறிட்டு கனி கொடுத்த நிகழ்வை இன்றும் திருவிழாவின் இரண்டாம் நாளில் அதுபோலவே செய்து நினைவு கூறப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


நெல்லை மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உரு கொண்ட ஆலயம் இன்றும் அது வழிபாட்டு தலமாக உண்டு .அங்கு திருவந்தாதி பதிகங்கள் பாடப்பட்டு நாள்தோறும் பூஜைகள் செய்யப் பட்டு அம்மையாரின் குரு பூஜையும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.