கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
டிராஸ், ஜம்மு காஷ்மீர்: 26 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் பிராந்தியத்தில் நடந்த தீரமிகு போரில் இன்னுயிரை ஈந்த இந்திய வீரர்களுக்கு அவர்களது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் பலரும் இன்று வீர அஞ்சலி செலுத்தினர்.
1999ம் ஆண்டு மே மாதம் கார்கில் பகுதியில் போர் தொடங்கியது. அப்போது இந்தியப் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக, பின்னாளில் சர்வாதிகாரியாக திகழ்ந்த முஷாரப் இருந்தார்.
பாகிஸ்தான் படைகளும் பயங்கரவாதிகளும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி, ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் உள்ள முக்கிய சிகரங்களைக் கைப்பற்றினர். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான ராணுவ மோதலுக்கு வழிவகுத்தது. பல வாரங்கள் நடந்த கடுமையான போருக்குப் பிறகு, இந்திய ராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலைகளையும் மீட்டெடுத்தது. பாகிஸ்தான் இந்தப் போரில் பெரும் தோல்வியையும் இழப்பையும் சந்தித்தது. போர் அதிகாரப்பூர்வமாக ஜூலை 26, 1999 அன்று முடிவுக்கு வந்தது.
இந்த போரில் 545 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்த நாட்டுக்காக தியாகம் செய்தனர். கார்கில் போரின்போதே நாடே ஒற்றுமையுடன் ராணுவத்துக்கு துணையாக ஆதரவாக நின்று இந்தியாவின் உறுதிமிக்க வீரத்தை வெளிப்படுத்தியது. ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவுடன், நமது படையினர் அபாரமான வெற்றியை பெற்றனர்.
இந்த நாயகர்களைப் போற்றும் வகையில், மிக உயர்ந்த ராணுவ மரியாதைகளை மத்திய அரசு வழங்கியது. 4 பரம் வீர் சக்ரா, 9 மகா வீர் சக்ரா, மற்றும் 55 வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன. கூடுதலாக, 1 சர்வோத்தம் யுத்த சேவா பதக்கம், 6 உத்தம் யுத்த சேவா பதக்கங்கள், 8 யுத்த சேவா பதக்கங்கள், 83 சேனா பதக்கங்கள் மற்றும் 24 வாயு சேனா பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இன்று கார்கில் போரின் 25வது ஆண்டு தினமாகும். இதையொட்டி டிராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திரா திவிவேதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தியாகிகளின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல பொதுமக்களும், பல்துறைப் பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.