Karnataka Power Trasnsition: கர்நாடகாவில்.. சித்தராமையா விலகுகிறார்.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்

Su.tha Arivalagan
May 28, 2026,11:50 AM IST

பெங்களூரு: கர்நாடக அரசியலில் மீண்டும் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.


கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். 


ஆனால், இன்று (மே 28, 2026) நடைபெற்ற இந்த சந்திப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை உணர்த்துகிறது. சந்திப்பின் போது, முதல்வர் சித்தராமையாவை டி.கே.சிவகுமார் மிகுந்த மரியாதையுடன் கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, அவரது காலில் விழுந்து வணங்கி நெகிழ்ச்சியுடன் ஆசி பெற்றார். சித்தராமையாவும் புன்னகையுடன் அவரது தோளைத் தொட்டு மனதார வாழ்த்தினார்.


முதல்வர் நாற்காலி மாறுகிறதா? 




இந்தத் திடீர் சந்திப்புக்கு பின்னால் ஒரு முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முதல்வர் பதவியை சித்தராமைய்யா ராஜினாமா செய்ய உள்ளதாகவும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் போதே, ஆட்சிப் பொறுப்பை இரு தலைவர்களும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என்ற ரகசிய உடன்படிக்கை எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.


அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தற்போது சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெறவிருப்பதாகவும், அதற்கு முன்னதாக மூத்த தலைவரான சித்தராமையாவைச் சந்தித்து டி.கே.சிவகுமார் வாழ்த்துப் பெற்றதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


எம்.பி.,ஆகிறாரா சித்தராமைய்யா?


பீகாரில் நிதிஷ்குமார் செய்தது போல் சித்தராமைய்யாவும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, எம்.பி.,யாக பொறுப்பேற்று, தேசிய அரசியலில் நுழைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் சித்தராமைய்யா தரப்பில் அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தொடர்ந்து அவர் எம்எல்ஏ.,வாக மட்டுமே நீடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.