ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!

Swarnalakshmi
Nov 13, 2025,12:17 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கற்பூரவள்ளி இலைகள்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகுந்த பலன் அளிக்கக் கூடியது இந்த "ஓமவள்ளி" எனப்படும் கற்பூரவள்ளி இலைகள். இந்த ஒரு செடி நம் வீட்டு தோட்டங்களிலோ அல்லது சிறிய தொட்டிகளிலோ வளர்க்கப்படுவதனால் இந்த இலைச்சாறு பிழிந்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


இனிவரும் காலம் குளிர்காலமாக இருப்பதனால் இந்த அருமையான மூலிகையை நம் வீட்டில் வளர்ப்பது அவசியம். மேலும் சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதம் இல்லாமல் அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு,மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி,பிழிந்து அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். இதையெல்லாம் பாட்டி வைத்தியம் என்று கூறுவார்கள். ஆனால் சில உடல் தொந்தரவுகளுக்கு இந்த பாட்டி வைத்தியம் நல்ல கை மருந்தாக இருக்கும்.


சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் சில வகையான உணவுகளை உட்கொள்வதனால் ஏற்படும். அந்த சமயத்தில் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையும் உருவாகும். இதற்கு கற்பூரவள்ளி செடி இலை சாற்றினை  சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் நீங்கும்.




சுவாசக் கோளாறுகள்: அதிகமாக சுவாசக் கோளாறுகள் இருப்பவர்கள், சளி, இருமல்,கபம், வரட்டு இருமல், மூக்கடைப்பு மற்றும் தொண்டை  போன்ற பிரச்சினைகளை சரி செய்ய இந்த இலை பெரிதும் உதவுகிறது.இந்த இலையை ஒரு பத்து எடுத்து, தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, அதன் நீராவியை சுவாசிப்பது அல்லது மார்பில் அதன் சாற்றை தடவுவது நல்ல நிவாரணம் அளிக்கும்.

 இந்த இலைச்சாறு  நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது.


மேலும் சக்தி வாய்ந்த வலி நிவாரணையாகவும் செயல்படுகிறது. தலைவலிக்கு அருமையான மருந்து. ஓமவல்லி இலை சாற்றை நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரை உடன் கலந்து, நெற்றியில் பற்று போடுவதால் தலைவலி மற்றும் தலையில் உள்ள சூடு குறையும்.

சரும  ஆரோக்கியத்திற்கும் இது மருந்தாகிறது. நுண்  தொற்றினால் ஏற்படும் சொறி, படை, அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கும் இந்த ஓமவல்லி  இலைச்சாறு பெரிதும் உதவுகிறது.


சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி கஷாயம் செய்வது எப்படி?...


செய்முறை 1:


மூன்று டம்ளர் தண்ணீரில், கற்பூரவள்ளி இலைகள் 10, சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு+ மஞ்சள் தூள் அரை ஸ்பூன், இந்த கலவையை நன்றாக கொதிக்க வைத்து, பாதியாக தண்ணீர் சுண்டி வந்தவுடன், அதனை வடிகட்டி,தேன் கலந்து அல்லது உப்பு கலந்து குடிக்க,நெஞ்சு சளி குணமாகும்.


கடுமையான இருமல், தொண்டை கட்டு இருப்பவர்கள் இந்த கசாயத்தை அருந்துவது  நல்ல பலன் அளிக்கும்.


செய்முறை 2:


1.கற்பூரவள்ளி இலை- 10

2.வர மல்லி அல்லது கொத்தமல்லி விதைகள்  ஒரு ஸ்பூன்.

3.சுக்குப்பொடி சிறிதளவு 

4.மிளகு -5

5.சீரகம் ஒரு ஸ்பூன்

6. திப்பிலி நான்கு 

7. பனங்கற்கண்டு பொடி தேவைக்கு ஏற்ப 

8.தண்ணீர் இரண்டு கப் 


ஒரு மிக்ஸி ஜாரில் கொத்துமல்லி விதை, சுக்கு,,சீரகம் ஆகியவற்றை  போட்டு அரைத்துக் கொள்ளவும்.  மிளகு திப்பிலி அப்படியே போட்டுக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் கற்பூரவள்ளி இலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு மிக்ஸியில் போட்ட கலவை பொடியை இந்த கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒரு கப்பாக தண்ணீர் குறையும் வரை கொதிக்க விடவும். பிறகு அதனை வடிகட்டி பனங்கற்கண்டு பொடி சேர்த்து குடிக்கவும்.


வெஜிடபிள் சூப்,காளான் சூப், தக்காளி சூப் போன்ற சூப்  வகைகளை விரும்பி அருந்துபவர்களுக்கு இந்த கற்பூரவள்ளி சூப் தொண்டைக்கு இதமானதாக இருக்கும்.


எதையும் அளவுடன் உட்கொண்டால்  நன்மை பயக்கும்.


நீண்ட நாட்களாக நெஞ்சு சளி இருக்கும் குழந்தைகளுக்கு தோசை கல்லில் வாட்டி கையால் அதனை பிழிந்து சாற்றை எடுத்து நெஞ்சில் தடவி வர நெஞ்சில் கட்டிய கபம் படிப்படியாக  குறையும்.


இது போன்ற சின்ன சின்ன கை வைத்தியங்கள் தெரிந்து கொள்வது அவசர காலங்களில், மழைக்காலங்களில், கடும் குளிர் பிரதேசங்களில் வாழ்பவருக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.