தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை.. வான்மழை மட்டுமல்ல.. ஆன்மீகமும் பொழியும் மாதம்!
- இரத்னா செந்தில்குமார்
தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மாதங்களில் எட்டாவது மாதமாக கார்த்திகை மாதம் இன்று பிறந்திருக்கிறது. தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தை குறிக்கும். சூரியன் தமிழில் தேள்.. என்று சொல்லப்படும் விருச்சிக ராசியில் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாட்கள் இந்த மாதமாகும்.
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை மிகச் சிறப்பான சிவனுக்கு உரிய நாட்களாக மக்கள் வணங்குவார்கள். சிவன் கோவில்களில் சோமவார சங்காபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும் கார்த்திகை மாதத்தில் சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுவது பெரிய புண்ணியத்தையும், செல்வத்தையும் தரக்கூடியதாக நம்பிக்கை உள்ளது.
கார்த்திகை மாதம் இயற்கையின் கொடையானமழை பொழியும் அற்புதமான மாதமாகும் கார்த்திகை மாதத்தில் ஆன்மீக வழிபாடுகளும் விழாக்களும் மிகச் சிறப்பாக இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு ஆனால் கார்த்திகை மாதத்தில் முதல் நாள் எல்லோருமே சாமியே சரணம் ஐயப்பா! என்று சபரிமலைக்கு மாலை போடுவதும் கூட்டுப் பிரார்த்தனை செய்வதும் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை காண பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரி ஐயனை நீ காணலாம் என்று பாடிக்கொண்டே...
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே ஐயப்போ என்று பக்தி முழக்கத்துடன் சபரிமலைக்கு செல்வார்கள். அதுபோல சிவன் கோவில்களி எல்லாம் சோமவார சங்காபிஷேக சிறப்பை காண மக்கள் கூடுவார்கள். கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் தமிழ் கடவுள் முருகப்பெருமானை என்றும் நினைத்து வணங்குவார்கள். இதையெல்லாம் கடந்து கார்த்திகை மாதம் என்றால் அது தீபத் திருவிழா அது எங்கள் திருவண்ணாமலையின் பெருவிழா.
அரியும் பிரம்மனும் யார் பெரியவர்கள் என்று தங்களுக்குள் சண்டையிட தன்னுடைய அடி முடி யார் காண்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள் என்று சிவபெருமான் சொல்ல, இருவரும் அடிமுடி காண செல்ல முடியாத சூழலில் நெருப்பு பிழம்பாக ஜோதி வடிவாக நிற்கும் சிறப்பே எங்கள் தீபத் திருவிழாவின் உச்சகட்ட சிறப்பாக 2,668 அடி உள்ள திருவண்ணாமலை மலை மீது தீப தரிசனம். எல்லோருக்கும் ஒளி வடிவாக இறைவன் எல்லோருக்கும் காட்சி தந்து மக்களின் மன இருளை அகற்றி ஒளி வடிவமாக வாழ்வின் ஒளியை ஏற்றி வைப்பார்.
கார்த்திகை 17ஆம் தேதி திருவண்ணாமலையின் தீப தரிசனம் திருவிழாவின் பெருவிழாவாக நடைபெறும் .
கார்த்திகை மூன்றாம் தேதி அமாவாசை நாளாகவும்,
கார்த்திகை 18 ஆம் தேதி பௌர்ணமி நாளாகவும் ,
கார்த்திகை 17ஆம் தேதி கிருத்திகை தினமாகவும்,
கார்த்திகை 24ஆம் தேதி சஷ்டி தினமாகவும் ,ஆன்மீக பக்தர்களால் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் தீபம் ஏற்றுவதும் அதைத்தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் தீபம் ஏற்றுவதும் அதைத்தொபடர்ந்து தை மாதம் முழுவதும் தீபம் ஏற்றுவதும் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாவாக தைத்திருநாளை கொண்டாடுவதும் என இந்த கார்த்திகை மாதம், எல்லா பண்டிகைகளையும் தன்னுடன் அழைத்து வந்து ஆன்மீகத்தையும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் தரும் மாதமாக கார்த்திகை மாதம் இருக்கிறது
இந்த கார்த்திகை மாதம் எட்டாம் தேதி திருவண்ணாமலையின் தீபத் திருவிழா இனிதே துவங்குகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விழாக்கள் என்றால் திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவார்கள். அது எங்கள் ஊருக்கு கிடைத்த பெருமையாகவும் நாங்கள் அந்த மண்ணில் பிறந்து வாழ்கிறோம் என்ற கர்வமாகவும் நாங்கள் நினைக்கிறோம். இத்தகைய சிறப்புமிக்க கார்த்திகை மாதத்தை ஆன்மீகம் மாதமாகவும் விழாக்கள் கொண்டாடும் மாதமாகவும் தமிழின் பெருமையை போற்றும் மாதமாகவும் நாம் அனைவரும் போற்றி வணங்குவோம்.
ஓம் நமசிவாய
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா சாமியே சரணம் ஐயப்பா
என்ற கோஷம் இந்த மாதம் முழுவதும் கேட்கலாம் இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம் கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை இன்னும் பேசிக்கொண்டே இருக்கலாம் தமிழ் மாதத்தின் பெயர்களை படிப்போம் தமிழ் மாதத்தின் சிறப்புகளை உணர்வோம் நாம எல்லாம் தமிழர்கள் என்ற பெருமை மட்டுமல்ல கர்வமும் கொள்வோம்!
(திருமதி இரத்னா செந்தில்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் இயக்குநர்)