முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

Su.tha Arivalagan
Jul 19, 2025,08:43 PM IST
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

மு.க.முத்து, முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதியின் மூத்த மகன் ஆவார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில்  தனது குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார்.

மு.க.முத்து, 1948 ஜனவரி 14 அன்று திருக்குவளையில் பிறந்தார். அவரது தாயார் பத்மாவதி, முத்து பிறந்த சிறிது காலத்திலேயே காசநோய் காய்ச்சலால் தனது 20 வயதில் காலமானார். பத்மாவதி பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான சிதம்பரம் சி.கே.ஜெயராமனின் மகளாவார். மு.க.முத்து, தனது தாய்மாமனான சிதம்பரம் எஸ். ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அறிவுநிதி என்ற மகன் உள்ளார்.



மு.க.முத்து தனது தந்தையின் ஊக்குவிப்பால் திரையுலகில் நுழைந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். அப்போதைய பிரபல நாயகனான எம்ஜிஆரைப் போலவே அவரது வேடங்களும் கதாபாத்திரங்களும் அமைந்திருந்தன. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க.முத்துவை கருணாநிதி முன்னிறுத்துவதாக அப்போது பேசப்பட்டது. அவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், பாடகராகவும் புகழ் பெற்றார்.

பிள்ளையோ பிள்ளை (1972), பூக்காரி (1972), சமையல்காரன் (1974), அணையா விளக்கு (1975), இங்கேயும் மனிதர்கள் ஆகியவை அவர் நடித்த சில படங்கள். அவர் பாடிய பாடல்களில், 'சமையல்காரன்' படத்தில் இடம்பெற்ற 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' மற்றும் 'அணையா விளக்கு' படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு', 'நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' போன்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. 

தேனிசைத்தென்றல் தேவா இசையில் 'மாட்டுத்தாவணி' என்ற படத்தில் ஒரு நாட்டுப்புறப் பாடலையும் பாடியுள்ளார். நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இணைந்து அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன.

ஆரம்பத்தில் திமுகவில் செயல்பட்டு வந்தவரான மு.க.முத்து, தனது தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மு.க.முத்துவுக்கு நிதி உதவியும் கூட செய்தார். இருப்பினும், உடல்நலக் குறைபாடு காரணமாக, 2009-ல் தனது தந்தையுடன் மீண்டும் இணக்கம் ஏற்பட்டது.

தனது கடைசிக்காலத்தில், பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தார் மு.க.முத்து. அவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும், இது அவரது திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பாதித்ததாகவும் தகவல்கள் உள்ளன. பலமுறை உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.