கரூர் சம்பவ வழக்கில் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

Su.tha Arivalagan
Jan 06, 2026,03:02 PM IST

டில்லி : கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. 


2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது விஜய்யை காண வந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கரூரில் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்து விட்டனர். 




கரூர் மாவட்ட போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பாக தவெக நிர்வாகிகள் பலரும் டில்லிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையின் போது பல முக்கிய ஆதரங்களை தவெக.,வினர் சிபிஐ.,யிடம் அளித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள், விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இருந்த சிசிடிவி கேமிரா உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி, ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் தவெக கட்சியின் தலைவர் என்ற முறையிலும், சம்பவம் நடைபெற்ற போது அங்கு இருந்தவர் என்ற முறையிலும், விஜய்யை பார்க்க வந்தே 41 பேர் உயிரிழந்தார்கள் என்ற முறையிலும் விஜய்யை சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. ஜனவரி 12ம் தேதி டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, அவர் அளிக்கும் பதில்களின் ஆகியவற்றையும் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.