கரூர் விபரீதத்தில் 36 பேர் பலி.. தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Sep 27, 2025,10:43 PM IST
சென்னை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் இன்று நடந்த பெரும் துயரச் சம்பவம் மக்களை உலுக்கி எடுத்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள், 16 பேர் பெண்கள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் விரைந்து சென்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
விசாரணைக் கமிஷன் அமைப்பு
கூட்ட நெரிசல் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கமிஷன் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும், அதற்கான காரணத்தை ஆராய்ந்தும், எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அரசுக்குப் பரிந்துரைக்கும்.
முதல்வர் கரூர் விரைகிறார்
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைகிறார். அங்கு சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளார்.