கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி...கோர்ட் அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
Oct 03, 2025,12:55 PM IST

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழக அரசிற்கு மதுரை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


செப்டம்பர் 27ம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழக்குகள் தவெக தரப்பு, தமிழக அரசு தரப்பு உள்ளிட்டோர் சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் இன்று ஒன்றாக விசாரித்தனர்.




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறக, தவெக மற்றும் தமிழக அரசிற்கு நீதிபதிகள் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியதுடன், பல அறிவுறுத்தல்களையும் வழங்கினர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், அரசியல் பொதுக்கூட்டங்களில் குடிநீர்,ஆம்புலன்ஸ், வெளியே செல்லும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும் தேசிய மாநில நெடுஞ்சாலைகள் அருகே நடத்தப்படக்கூடாது. எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என தெரிவித்தனர். இது விவகாரம் தொடர்பான பதில் அளிக்க விஜய் தரப்பு மற்றும் அரசு தரப்பிற்கு 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. விசாரணையில் திருப்தி இல்லை என்றால் வேண்டுமானால் சிபிஐ.,க்கு மாற்றலாம். அதோடு சிபிஐ விசாரணை கேட்பவர் பாதிக்கப்பட்டவரா? பாதிக்கப்பட்டவர் அல்லாமல் மற்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பது ஏற்புடையது அல்ல என கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.  மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.