கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
டெல்லி: கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய்யின் கூட்டம் நடைபெற்றது. இதில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியிருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது. விஜய் பேசி முடித்த நிலையில் மிகப் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வருத்தமும் வேதனையும் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு சார்பிலும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியும் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.