கரூர் கூட்ட நெரிசல் பலி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வேதனை - இரங்கல்
Sep 27, 2025,10:31 PM IST
டெல்லி: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 31 பேர் பலியான சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும், வருத்தமும் வெளியிட்டுள்ளார். அதேபோல குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.
கரூரில் இன்று மாலை நடந்த தவெக தலைவர் விஜய்யின் அரசியல் கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் உள்பட 31 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பேசி முடித்த நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல்
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிர்கள் பலியான செய்தியறிந்து வேதனையடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வேதனை
இன்று (27/09/2025) கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், உறவுகளை இழந்து சொல்லொண்ணா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு மனஆறுதலையும் மனவலிமையையும் தந்திட அன்னை சக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி வேதனை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகுந்த வேதனையடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்தக் கடும் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவர்களுக்குத் தரவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.