வான் சிறப்பு .. மாமழை போற்றுதும்..மாமழை போற்றுதம்!
- கீர்த்தனா பு, உதவிப் பேராசிரியர், பகாளிச்செட்டிப்பாளையம்
“மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்” என்றார் இளங்கோவடிகள்.
அவ்வகையில் திருவள்ளுவரும் தனது ஒப்பற்ற நூலான திருக்குறளின் இரண்டாவது அதிகாரமாக வான்சிறப்பினை இடம்பெறச் செய்து வான் மழையைப் போற்றியுள்ளமை குறித்துக் காண்போம்.
வேண்டுவோருக்குத் தாமே உணவும் ஆகிறது; மற்ற உணவுப் பொருள்களை விளைவிக்க மூல காரணமாகவும் விளங்கி மக்களுக்கு உணவாகத் திகழ்கிறது மழை.
அத்தகைய உணவு கிடைக்காமல் பசித்திருக்கும் நிலை பிணி எனவும் தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் தொன்றுதொட்டு சுட்டப்பட்டு வருகிறது. பிணியாகிய பசி ஒருவரின் நல்ல குணங்களையும் போக்கி, பல்வேறு தீய செயல்களில் அவர்களை ஈடுபடச் செய்யவும், சிந்தனை ஆற்றல் முதலான அடிப்படைக் குணங்களை மங்கிப் போகச் செய்து தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகச் சீர்கேட்டிற்கும் வழிவகுக்கும்.
ஆனால் பசியற்ற நிலையில் நலமானதொரு சமூகக் கட்டமைப்பும் நல்லாட்சியும் நல்லறங்களும் நடந்தேறும். இவை அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வதால் மழையை நிறைவாழ்வளிக்கும் அமிர்தம் என்கிறார் வள்ளுவர்.
இதனையே வானகம் மழை பொழியாது பொய்த்துப் போனால் இத்தகைய கடல் சூழ்ந்த உலகில் பசியானது துன்பத்தை வழங்கும் எனவும் குறிப்பிடுகிறார்.
பரந்து விரிந்த கடல் நீராயினும் அதனை நேரடியாகக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளவோ, உணவுப் பொருள்களை விளைவிக்கப் பாசனத்திற்குப் பயன்படுத்தவோ முடியாது என்பதும் இதனால் பெறப்படும் கருத்து.
இக்கருத்தினையே ஏரினைக் கொண்டு உழவு செய்யும் உழவர்களும் மழை பெய்யாது வானம் பொய்த்துப்போனால் தங்களது தொழிலைக் கைவிட வேண்டி வரும் என்பதாகக் குறிப்பிடுகிறார். தொழில்களிலே சிறந்த தொழில்களுள் ஒன்றாகத் திகழக்கூடிய உழவுத் தொழிலும் மழையின்றி முடங்கிவிடும் என்பதாக மழையின் சிறப்பினை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.
கொடுப்பதும் கெடுப்பதும் மழையே
பொழிவதால் வளத்தினைக் கொடுக்கும் மழையானது பொழியாமல் பொய்த்துப் போனால் பச்சைப் பசும் புல்லும் முளைக்காது. அதனால் பசியும் பட்டினியும் மேலிட்டு வறட்சியும் வறுமையும் உண்டாகும் எனவும், அதே மழைநீர் அளவிற்கு அதிகமாகப் பெய்யும் காரணத்தால் வெள்ளப்பெருக்கு முதலான இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு அதனாலும் உலக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மழையால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் முன்வைக்கிறார்.
வான்மழையானது கொடுக்கவும் செய்கிறது, கெடுக்கவும் செய்கிறது என்பது இதனால் பெறப்படும் கருத்தாகும்.
அளவு கடந்த நீரைத் தன்னகத்தே கொண்டதாக இருந்தாலும் தொடர்ந்து மழை பொய்த்துப் போனால் கடல் நீர்கூட தனது வளத்தில் குறைந்து விடும். அதாவது மழை மேகங்களை உண்டாக்கும் கடல் நீருக்கும் சமநிலையை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது வான்மழையே.
எனவேதான் வான்மழை பல ஆழ்ந்த சமூக, பொருளாதார, ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத் தாக்கங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் உண்டாக்குவதை வள்ளுவரின் வரிகள் வழி அறிய முடியும்.
வான்மழை பொழியாது பொய்த்துப் போனால் தேவர்கள் முதலான கடவுளருக்குச் செய்யப்படும் சிறப்பும் பூசனைகளும் நடைபெறாது போகும்.
பொதுவாக இறைநம்பிக்கைகள் என்பவை மக்களை நல்வழிப்படுத்தி, நற்சிந்தனைகளை மேலோங்கச் செய்து, தெய்வத்தின் பெயரால் குற்றச் செயல்கள் ஏற்படாமல் தடுத்தாள்வதாக அமைகின்றன. ஆனால் மழைப்பொழிவில் குறைவு ஏற்படுமானால் அத்தகைய இறைவழிபாடும் இறைநம்பிக்கையும் குறைந்து, அதன் வாயிலாகக் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் சூழலும் உள்ளதை குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
பிற உயிர்களின் துயரம் கண்டு மனமிரங்கிச் செய்யப்படும் தானங்களும், மனதைக் கட்டுப்படுத்தி அறவழியில் செலுத்தும் பெரியோர்களும், தவவலிமையால் தான் கண்ட அறங்களை அனைவரிடத்தும் கூறி நல்வழி காட்டும் தங்களது அறச்செயல்களைக் கைவிட்டு விடுவார்கள். எனவே தானம், தவம் இரண்டும் இவ்வுலகில் தங்காது; பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்கிறார் ஆசிரியர்.
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாவன உணவு, உடை, உறைவிடம். அவற்றுள்ளும் முதலாவதாக அமைவது உணவு. அத்தகைய உணவினை வழங்கி பசிப்பிணியைப் போக்குவது அறம் அனைத்திலும் மேலானதாகப் பெரியோர்களால் கருதப்படுகிறது.
எந்தச் சமூகத்தில் பசி முதலான குறையின்றி அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி மக்கள் நிறைவுடன் வாழ்கின்றனரோ, அங்கே ஒழுக்கமும் நன்மைகளும் நிறைந்து அறம் தழைக்கும். மக்களிடையே ஒற்றுமையுணர்வும் அன்பும் அறவுணர்வும் மேலோங்கும் என்பது பெறப்படும் கருத்தாகும்.
தொகுப்புரை
உலக மக்களுக்கு அமிர்தமாக விளங்குவது மழையாகும்.
பசியற்ற சமூகமே நல்வழியில் தழைக்கும்.
பசியற்ற மக்களிடத்தில் நற்பண்புகள் ஓங்கி இருக்கும்.
முறையான மழைப்பொழிவு நல்லாட்சி அமையவும் ஆன்மீகம் தொடர்பான நற்செயல்கள் நடைபெறவும் காரணமாகிறது.
மனித குலத்தின் நல்வாழ்விற்கும் சீர்கேட்டிற்கும் மறைமுக மற்றும் நேரடித் தூண்டுகோலாக விளங்குவது மழையாகும்.
மழை இன்றி மண்ணுலகம் செழிப்புற இயலாது.