21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!
பெங்களூரு: உங்களது பணத்தை 21 நாளில் இரட்டிப்பாக்கித் தருகிறோம் என்று கூறி பலரிடமும் பல கோடி வரை பணத்தை மோசடி செய்த ஒரு கேரள தம்பதி தற்போது தலைமறைவாகி விட்டது.
எளிய முறையில் பணக்காரராக வேண்டும் என்பதே தற்போது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இப்படி ஆசைப்படுவோரில் 99 சதவீதம் பேர் இப்படிப்பட்ட எளிய முறைகளைப் பின்பற்றி மோசடிக்குள்ளானதுதான் மிச்சம். காரணம், இப்படிப்பட்ட அப்பாவிகளை ஏமாற்றுவதற்காகவே ஊருக்கு நாலு பிராடு கும்பல் காத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிக் கும்பலிடம் பணத்தை தொடர்ந்து பறி கொடுத்தபடி உள்ளனர் அப்பாவி மக்கள்.
கேரளாவைச் சேர்ந்த டோம் மற்றும் ஷைனி என்ற தம்பதியினர், மிக அதிக முதலீட்டு லாபத்தை ஈர்க்கும் விதமாக நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தம்பதியான டோம் மற்றும் ஷைனி, 'A&A சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ்' என்ற பெயரில் ஒரு சீட்டு நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் முதலீடுகளுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை மிக உயர்ந்த வருமானத்தை வழங்குவதாகக் கூறி வந்துள்ளனர்.
ஆரம்பத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தம்பதியினர் சீரான வருமானத்தை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், சமீபகாலமாக, பணம் வழங்குவது நின்றுவிட்டதாகவும், தம்பதியினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். கிட்டத்தட்ட 300 முதலீட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி நகர் காவல் நிலைய போலீஸார் இவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இருவரின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டு, அலுவலகம் மூடப்பட்டு, இந்தத் தம்பதியினர் தலைமறைவாக உள்ளனர்.