கேரளாவில் சுடிதார் அணிந்து வந்ததால் ரோட்டிலேயே நிறுத்தப்பட்ட தலைமை ஆசிரியர்!

Su.tha Arivalagan
Feb 06, 2026,10:20 AM IST

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில், சுடிதார் அணிந்து வந்ததற்காகத் தலைமையாசிரியர் ஒருவரைப் பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கொட்டாரக்கரை பகுதியில் உள்ள நெடுவத்தூர் ஈஸ்வரவிலாசம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிந்து எஸ். நாயர். புதன்கிழமை காலை பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்துள்ளார். அப்போது, பள்ளியின் நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர் அவரை உள்ளே விட மறுத்து நுழைவாயில் கேட்டைப் பூட்டியுள்ளார். பள்ளி மேலாளரின் உத்தரவுப்படி, சுடிதார் அணிந்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.


இதனால் தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்காக முட்டைகள் உள்ளிட்டப் பொருட்களுடன் ஆட்டோவில் வந்திறங்கிய அவர், தமக்கு அனுமதி மறுக்கப்பட்டு ரோட்டிலேயே நிறுத்திய செயலால் கடும் அதிர்ச்சியுற்றார். மன உளைச்சல் அடைந்தார். 




அடுத்த நிமிடமே ஆவேசமான அவர், பள்ளி வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாரக்கரை போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தலைமையாசிரியரை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் சிந்து போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், பாதுகாவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கேரள அரசு கடந்த 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வெளியிட்ட அரசாணைகளின்படி, ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான, கண்ணியமான மற்றும் சௌகரியமான ஆடைகளை அணிய முழு உரிமை உண்டு. புடவை அணிவது கட்டாயமல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பணியாற்றும் பள்ளியின் மேலாளர் சுரேஷ் குமார், பெண் ஆசிரியர்கள் சேலையில்தான் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால், சுரேஷ் குமார் தன் மீதான புகாரை மறுத்துள்ளார். ஆசிரியர்கள் எந்த ஆடையையும் அணிய சுதந்திரம் உள்ளது என்றும், பாதுகாவலரின் ஓவர் ஆர்வத்தாலேயே இது நடந்திருக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், பள்ளி மேலாளர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், சுடிதார் அணியக்கூடாது என ஏற்கனவே எச்சரித்ததாகவும் தலைமையாசிரியர் சிந்து குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தச் சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.