அரும்புகளின்.. டிசைன் டிசைனாக உடையணிந்து.. ஆடை நாள் கொண்டாட்டம்!

Su.tha Arivalagan
Feb 11, 2026,04:13 PM IST

- ஆ.வ. உமாதேவி 


பொதுவாக ஆடை என்பது ஒரு மனிதனுக்கு மிடுக்கையும், கம்பீரத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விஷயமாகும். "ஆள் பாதி ஆடை பாதி" என்னும் பழமொழியால், ஆடையின் முக்கியத்துவத்தை அறியலாம். பொது இடங்களில், ஆடையை வைத்தே நம் மதிப்பும் அமைகிறது. ஆனால் ஆளுக்கு கொடுக்காத மரியாதையை ஆடைக்கு கொடுப்பது சரியான முறையான விஷயமாகாது. 


புது ஆடை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மகிழ்ச்சிதான். புத்தாடை அணிந்து பண்டிகை நாட்களை கொண்டாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பெரியவர்களை விட குழந்தைகள் புத்தாடை அணியும் போது புத்தம் புது மலர் அழகாக மலர்ந்தது போல தோன்றும் அளவுக்கு அழகாக இருப்பர்.




"ஆடை நாள் கொண்டாட்டம்" என்பது பொதுவாக புத்தாடை அணிந்து மகிழும் பண்டிகைகள், கலாச்சார விழாக்கள் அல்லது குறிப்பிட்ட ஆடை பாணியை கொண்டாடும் சிறப்பு நாட்களை குறிக்கும். பெரும்பாலும் தீபாவளி ரமலான் கிறிஸ்துமஸ் போன்ற திருநாள்களில் மக்கள் புது ஆடை அணிந்து மகிழ்வதை இந்த நாள் குறிக்கிறது. 


நமது கலாச்சாரம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள நமது நண்பர்கள் நமக்கு உதவும் உழைப்பாளர்கள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள நமது பள்ளியில் இன்று "ஆடை நாள் கொண்டாட்டம்" மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்கள் தங்கள் மழலை மொழிகளால் கூறிய தகவல்கள் அருமையிலும் அருமை. 


டாக்டர், எஞ்சினியர், டீச்சர், பிளம்பர், செப், மீன்பிடிப்பவர், டிரைவர், உழவர், டைலர், குறவன், குறத்தி, பால்காரர், பெயிண்டர், நடனக் கலைஞர், தூய்மை பணியாளர் என பல்வேறு விதமான நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களின் ஆடைகளை அணிந்து, நடித்துக் காட்டி பேசியது மிகவும் அருமையாக இருந்தது. 


பெற்றோர்கள் மிகுந்த அக்கறையும் விருப்பமும் கொண்டு மாணவர்களை தயார்படுத்தி அனுப்பி வைத்தது பாராட்டுக்குரியது. அவ்வாறு மாணவர்கள் நடிக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள நமது நண்பர்களின் பணிகளை குறித்து அறிந்து கொள்கின்றனர். 




அவர்களிடம் உள்ள நடிப்பு, பேச்சு, நினைவாற்றல் போன்ற திறமைகள் வெளிப்பட வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது. இன்றைய நாள் வெகு சிறப்பான நாளாக எனக்கும் என் அரும்புகளுக்கும் அமைந்தது. 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)