இலைமலிந்த வேல் நம்பி எறிபத்த நாயனார்..63 நாயன்மார்கள் வரலாறு!

Su.tha Arivalagan
Apr 01, 2026,05:00 PM IST

- கலைவாணி கோபால்


இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தற் கடியேன்- சுந்தரமூர்த்தி நாயனார்


காவிரியின் அமராவதி ஆற்றின் கரையோரம் இருந்ததுதான் கருவூர். அந்தக் கருவூரில் அமைந்த மிகப் பழமையான சிவன் ஆலயமே ஆனிலை நாதர் ஆலயம்.


(ஆனிலை என்றால் தேவ பசுவான காமதேனு வந்து வழிபட்டதால் அந்த ஆலயத்திற்கு அப்படி ஒரு பெயர் உருவாயிற்று என்று ஒரு கூற்று சொல்லப்படுகிறது)


கருவூரில் வசித்தவர்தான் நம் சிவனடியார் எறிபத்த நாயனார். கழுத்தில் உருத்திராட்ச மாலை, மேலோங்கும் திருநீறு, காதில் கடுக்கன், முகத்தில் நீண்ட தாடி, தலையில் கொண்டை, கையில் மழு எனும் ஒரு சிறிய கோடாரியுடன் சிவனடியாரின் பாதுகாப்புக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். ஒரு சாயலில் பரசுராமரைப் போல ஒத்திருப்பார். 




அதே ஊரில் வசித்து வந்தவர் நம் சிவகாமி ஆண்டார். இவர் அங்குள்ள ஆனிலை நாதர் மீது பெரும் பக்தி கொண்டவர். அதுமட்டுமல்லாமல், நந்தவனத்தில் இருந்து அதிகாலை மலர் எடுத்துச் சென்று ஆனிலை நாதரை அர்ச்சிப்பார். அதுவே அவரின் முதல் கடமை; இரண்டாம் கடமை, வாழ்வில் ஒரே கடமையாகக் கருதி, சிறந்த வாசமிக்க பூக்களைப் பரிசுத்தமாக இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதால் காலையில் குளித்துவிட்டுத் தன் மூச்சுக்காற்று கூடப் பூவின் மேல் படக்கூடாது என்பதற்காக, முகத்துக்குத் துணியிட்டு மிகுந்த பக்தியுடன் அதைப் பறித்துக் கையில் இருக்கும் சுத்தமான இரு கூடைகளில் சேகரித்து, ஒரு கழியில் இருபுறமும் கட்டித் தோளில் சுமந்து ஆலயம் கொண்டு வந்து சிவனுக்குச் சாற்றுவார்.


அப்படி ஒரு காலைப் பொழுதில் விடிந்தும் விடியாத நேரத்தில், அன்று அஷ்டமியும் கூட, அந்த வாசமிக்க மலர்களைச் சேகரித்துத் தனது இரு கூடைகளில் கொண்டு வந்திருந்த நேரம், வழியில் பட்டத்து யானை ஒன்று, ஐந்து பாகங்களுடன் ஆற்றில் குளித்துவிட்டுச் சேட்டையைச் செய்து கொண்டு வந்தது. 


பட்டத்து யானையானது, அரசனுக்கு நிகராக மரியாதை கொடுக்கப்படும் ஒரு தகுதியைப் பெற்றிருந்தது. அதனால் பொதுமக்கள் யாரும் அது செய்யும் சேட்டையைப் பெரிதாகக் கருதுவது இல்லை. அன்று, அந்த யானையானது சிவகாமி ஆண்டாரைக் கண்டதும் அவர் கையில் கொண்டு வந்த கூடைகளில் இருந்த பூக்களை வீதியில் தள்ளிவிட்டு மிதித்தது; சிவகாமி ஆண்டவரையும் கீழே தள்ளிவிட்டது. 


இறைவனுக்குச் சாற்றுவதற்காகக் கொண்டு வந்த பூக்கள் தரையில் கிடப்பதைக் கண்டு சிவகாமி ஆண்டார் மிகவும் நொந்து தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். இறைவனுக்கு அவர் சாற்றும் பூமாலையானது அவர் உயிருக்குச் சமமானது. அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையில் விழுந்து அழுது கொண்டிருந்தார். 


அந்நேரம், பரசுராமர் ரூபத்தில் இருந்த எறிபத்த நாயனார், சிவனடியாரின் குரலைக் கேட்டு அங்கு ஓடி வந்தார். அவர் அப்படித் தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தவுடன், எறிபத்த நாயனாரின் கோபம் தலைக்கு ஏறியது. சிவனடியாரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார்? என்று கோபத்தில் கொந்தளித்தார். 


பட்டத்து யானையும் அதன் 5 பாகன்களும்தான் காரணம் என்பதை அறிந்து ஒரு நொடி கூட அவர் யோசிக்கவில்லை. முதலில் அந்த யானையின் துதிக்கையைத் தன் மழுவை எடுத்து வெட்டி எறிந்தார். யானை வலியில் துடித்துச் சாய்ந்தது; எனினும் அவர் கோபம் தாங்காமல் யானையின் பின்புறம் உள்ள மண்டையில் மழுவால் அடித்து அதைக் கொன்றார். அதுமட்டுமல்லாமல் யானையை அடக்காமல் விட்ட ஐந்து பாகன்களையும் அதே இடத்தில் வெட்டிச் சாய்த்தார். 


அனைத்து மக்களும் அந்தத் தெருவீதியில் ஒன்று கூடினர். அது பட்டத்து யானை ஆயிற்றே, அதன் மீது கை வைத்தால் அரசன் மீது கை வைத்ததற்குச் சமம். இந்தச் செயலுக்கு என்ன தண்டனை எறிபத்தருக்குக் கிடைக்கும்?" என்று மக்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். 


கீழே இருந்த சிவகாமி ஆண்டாரைத் தூக்கிவிட்டு, "சிவனடியாரைக் காப்பாற்றுவது என் உயிர் மூச்சு. அந்தச் சேவையிலிருந்து நான் தவறிவிட்டால் மட்டுமே நான் குற்றம் செய்தவன். நான் சிவனடியாரின் துன்பத்தைப் போக்குவதற்காகவே பிறந்தவன். அதனால் இந்தச் செயலுக்கு என்ன தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் இந்த விஷயம் கருவூர் மன்னனான புகழ்ச்சோழ மன்னன் காதுக்குச் சென்றடைந்தது. 


பட்டத்து யானை மீது கை வைத்தால் அது அரசன் மீது கை வைத்ததற்குச் சமம் என்று தெரிந்தும், யார் ஒருவன் இந்தச் செயலைச் செய்தது என்று மன்னனும் கோபமுற்றுப் பட்டத்து யானை இறந்த இடத்தை நோக்கி வந்தடைந்தார்.


"யார் இந்தச் செயலைச் செய்தது?" என்று கோபத்துடன் கேட்டார். எந்த ஒரு பயமும் இல்லாமல் சீறும் சிறுத்தையைப் போல் முன்வந்து நின்றார் எறிபத்த நாயனார். எந்த ஒரு பயமும் இல்லாமல், "இந்தச் செயலைச் செய்தவன் நானே. அதுமட்டுமல்லாமல் சிவனடியாரின் துன்பத்தைக் காக்கத் தெரியாத இந்த அரசு எதற்கு? அதிகாரம் எதற்கு? அரசன் சரியில்லையானால் மட்டுமே அவன் யானையும் சரியாக இருக்காது" என்று கோபத்தில் அரசரைப் பார்த்து எந்த ஒரு சலனமும் இன்றி கேள்வி எழுப்பினார். "சிவனே மேலோங்கிய தெய்வம். அவருக்குச் சேவை செய்யும் சிவனடியார்களின் துன்பத்தைப் போக்கத் தெரியாத இந்த மன்னன் நீதி தவறானவன்" என்று குற்றம் சாட்டினார். 


அதுமட்டுமல்லாமல், "நீ புகழ்ச்சோழ மன்னனாக இருந்தாலும், ஏன் பாரத கண்டத்துக்கே அரசனாக, தேவர்களுக்கே அரசனாக இருந்தாலும் நாம் அஞ்ச மாட்டோம். நாம் வணங்கும் சிவன் மன்னருக்கெல்லாம் மன்னவன். அவரைப் பூஜிக்கும் சிவனடியாரின் துன்பத்திற்குக் காரணம் உன் பட்டத்து யானை" எனக்கோபத்தில் கொந்தளித்தார்.


என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட அரசன், நாயனாரின் கேள்விகளை வாங்கிக் கொண்டு அமைதியாக யானையின் மீதிருந்து கோபம் தணிந்து இறங்கினார். பொதுவாக யானையின் மீதிருந்து அரசன் சாதாரண மக்களுக்காக இறங்குவதில்லை. 


என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சத்தில் அங்கு ஒன்று கூடிச் சலசலத்துக் கொண்டிருந்தனர். மன்னன் யானையிலிருந்து இறங்கி அவர் அருகில் சென்றார். உடைவாளினை உருவினார். "கூட்டம் வேல் எறிந்து கொள்ளாமல் வெட்டிக் கொல்லப்படப் போகின்றார் எறிபத்தர்" என எண்ணி, அவர் சாவதைக் காணச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டனர்.


ஆனால், அங்கு நடந்த காட்சியோ வேறு. ஆம், எறிபத்தர் முன் மண்டியிட்டு, கைகளை உயர்த்தி அதில் வாளை ஒப்படைத்தபடி புகழ் மன்னன் சொன்னார்: "ஐயா, சிவனடியார் வேறு, சோழ தேசத்தின் ஆட்சி வேறு என்றா நினைத்தீர்கள்? சோழ தேசம் சிவபூமி. ஒவ்வொரு சோழனுக்கும் சிவனே அரசன். நான் அந்தக் கூட்டத்துக்குத் தலைவன். எம் முன்னோரும் நானும் என் வம்சமும் சிவத்தொண்டுக்கு மட்டுமே அரசாள்வோம். இங்கு நடந்தது பெரும் குற்றமாகும். இதற்குச் சாக வேண்டியது அரசனாகிய நான் மட்டுமே; என் யானையோ பாகன்களோ அல்ல. எனவே உன் கரங்களால் என்னையும் வெட்டிக் கொள்ளுங்கள்" என உடைவாளை எறிபத்தரிடம் நீட்டினார் புகழ்ச்சோழ மன்னன்.


"சிவனடியார் பூஜையினைக் காக்க முடியாத மன்னன், எறிபத்தர் கையால் செத்துப் பாவம் தீர்த்தார் எனச் சோழ வரலாறு எழுதட்டும்" என மன்னர் கூறி எறிபத்தரிடம் தலைகுனிந்து நின்றார்.


மன்னனின் பேச்சில் மன்னனும் ஒரு சிவனடியார் என்பதை உணர்ந்த எறிபத்தர், "ஒரு சிவனடியாரைக் காக்க எண்ணி இன்னொரு சிவனடியாரின் துன்பத்திற்கு ஆளானோமே" என்று எண்ணிப் பெரும் வருத்தம் கொண்டார். "மன்னன் இருந்தால் ஆயிரம் சிவனடியார்களைக் காப்பார், நான் இருந்தால் என்ன செய்வது? எவ்வளவு பெரிய பாவத்திற்கு ஆளானேன்" என்று மனம் நொந்து தன் மழுவினால் தன்னையே வெட்டிக்கொள்ளக் கையில் மழு ஏந்தி நின்றார்.


சிவனுக்காகப் பறிக்கப்பட்ட மலர் கீழே விழுந்ததும் தன் உயிர் போனது போன்ற உணர்வில் உள்ள சிவகாமி ஆண்டார். 


சிவனடியாரின் கண்ணீரைக் கண்டதும் தனக்கு என்ன நேரும் என்பதைக் கூட அறியாமல் துன்பத்திற்குக் காரணமானவர்களைக் கொன்ற எறிபத்தர்.


சிவனடியாரின் துன்பத்திற்குத் தன்னுடைய ஆட்சியும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து தன் உயிரையும் விடத் துணிந்த புகழ்ச்சோழ மன்னன்.


இந்த மூவரின் சிவபக்தியையும் தன் திருவிளையாடல் மூலம் உணர்த்திக் கொண்டு புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் இறைவன் ஆனிலை நாதர்.


நாயனார் கையில் மழுவுடன் நின்றபோது அங்கே அசரீரி ஒலித்தது. "உங்கள் மூவரின் சிவபக்தியை மெய்ப்பித்தது இத்திருவிளையாடல்" என்று சிவபெருமானின் அசரீரி அங்கே கேட்டது. கையில் இருந்த கோடாரியைக் கீழே போட்டார் எறிபத்தர்.


இறைவனின் திருவருளால் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் எழுந்திருந்தனர். "உங்கள் மூவருக்கு நிகர் நீங்கள் மூவர் மட்டுமே என்பதை உணர்த்தவே இத்திருவிளையாடல்" என இறைவன் உணர்த்தினார். 


அதன்பின், எறிபத்தரும் புகழ்ச்சோழரும் சிவனடியார் என்ற வகையில் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சிவனடியார்களைத் தொடர்ந்து காத்த எறிபத்தர், பூலோக காலம் முடிந்து கைலாயம் ஏகினார். அவரைப் பூதகணங்களின் தலைவர் ஆக்கினார் சிவபெருமான்.


மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று அவர் குருபூஜை கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கரூர் பசுபதிநாதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று பூக்குடைத் திருவிழாவும், எறிபத்த நாயனார் காட்சியும் அரங்கேறும்.