வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கோவில்களுக்கு பிரபலமானது. இங்கு இல்லாத கோவிலே இல்லை.. கோவில் இல்லாத ஊர்களும் இல்லை.. எல்லாக் கோவில்களுமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருக்கோவில்கள், பெரும் கோவில்கள்தான்.
அப்படிப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் திருவலஞ்சுழி. இங்குதான் ஜடாமுடிநாதர் என்ற பெயரில் சிவபெருமான், பிரகதாம்பாள் சகிதம் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இது.
வழக்கமாக சிவன் கோவில்களில் அம்பாள் சிவனுக்கு இடதுபுறம்தான் இருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் பிரகாதம்பாள் வலது புறம் இருப்பார்.
ஒருமுறை சிவபெருமானை வணங்கி தனது குறையைக் கூற ஒரு தம்பதி வந்துள்ளனர். அவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை மனம் உருகி பிரார்த்திதுள்ளனர். அவர்களது குறையைக் கேட்டு மனம் இறங்கிய ஈஸ்வரன், அம்பாளையே குழந்தையாக்கி அந்தத் தம்பதிக்குப் பிறக்க வைத்துள்ளார்.
குழந்தையாகி வளர்ந்து வந்த அம்பாள் சிவபெருமானை பூஜிக்கும்போது ஜடாமுடி தாங்கிய கோலத்தில் இருந்த சிவபெருமான் அதே கோலத்தில் அம்பாளை மணந்து கொண்டாராம். இதனால்தான் அவருக்கு ஜடாமுடிநாதர் என்ற பெயர் வந்ததாக ஐதீகம்.
இந்தக் கோவிலில் விநாயகரும் விசேஷமானவர்.. எப்படி தெரியுமா.. திருப்பாற்கடலில் வாசுகி பாம்பைக் கொண்டு அமுதம் கடைந்தபோது அதிலிருந்து வந்த நுரையை எடுத்து சிவபெருமான் இந்த விநாயகரை உருவாக்கியதாக ஐதீகம். இதனால்தான் இந்த விநாயகர் சிலை வெள்ளை நிறத்தில் இருக்கும்.. வெள்ளை விநாயகர் என்றும் இதை அழைப்பார்கள். இக்கோவிலில் உள்ள விநாயகர் ஒரு அடிதான் இருப்பார். அவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆராதனை மட்டும்தான். இந்த நுரையால் செய்யப்பட்ட விநாயகர் மிகவும் பிரபலம்.
Video: திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்
இத்திருக்கோவில், காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், பிறகு மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். விநாயகர் சதுர்த்தி, மாதந்தோறும் வரும் சதுர்த்தி ஆகியவை இங்கு விசேஷமானது.
ஒரிரு ஆண்டுகளில் மகாமகம் வரப் போவதால் கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலுமே புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. மகாமகத்தின்போது அனைத்துக் கோவில்களிலும் கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளதால் அனைத்துக் கோவில்களும் அழகுற தயாராகி வருகின்றன.
செய்தி - புகைப்படம்: கும்பகோணம் ஜெயந்தி