ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்க தாமதமாக காரணம் இது தானா?

Su.tha Arivalagan
Jan 07, 2026,02:02 PM IST

சென்னை : விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.


விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான ஆன்லைன் புக்கிங்குகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. படம் ரிலீசாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை படத்தை வெளியிடுவதற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் ஜனநாயகன் படக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் அவரச வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட போது படத்தின் ரிலீசை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கின்ற விசாரணையை ஜனவரி 07ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்துள்ளனர்.




ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்குமா, படம் திட்டமிட்டபடி ஜனவரி 09ம் அன்று ரிலீசாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 


அதாவது, ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியில், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர் சாட்டையை எடுத்து சுழற்றும் காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதற்காக நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த விஜயா ஸ்டூடியோஸ் நிறுத்திற்கு செலுத்த வேண்டிய காப்புரிமை தொகையை செலுத்தாமல் இருப்பது தான் சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதம் என சொல்லப்படுகிறது.


அதே சமயம் படத்தில், ஓம் என்ற மத அடையாளம் வருவதற்கும், ராவனேஸ்வரன் மகன் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதற்கும் தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் தான் தணிக்கை சான்று கிடைக்காமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அல்லது நாளைக்குள் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு, படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டு விடும் என சொல்லப்படுகிறது.