திருவள்ளூர் அருகே..870 ஏக்கரில் உருவாகிறது.. புதிய அறிவுசார் நகரம்..!

Manjula Devi
Jun 02, 2025,10:31 AM IST

சென்னை: 870 ஏக்கரில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில், பல்வேறு உயர்கல்வி திட்டங்களை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. இதற்காக ஏழை,எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளயும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் உயர் கல்வியில் சேர்ந்து மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.மேலும்  கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.


அதில் ஒரு பகுதியாக மத்திய, மாநில துறை சார்ந்த உயர் பதவிகளுக்குப் போட்டி தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில், பல்வேறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.




அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, அரியலூர், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கணினி வசதி, போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான படிப்பகங்கள், ஏசி வசதி, குழந்தைகளுக்கான அரங்கு என பல்வேறு அம்சங்கள் நிறைந்த நூலகங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 


அதேபோல் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்வி தொடர்பான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் இடம்பெற்ற நவீன மயமான நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையங்கள்  செயல்பட்டு வருகின்றன.


அந்த வகையில் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 870 ஏக்கரில் புதிய அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவுசார் நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள இந்த அறிவுசார் நகரத்தில், கல்லூரி குடியிருப்பு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகங்கள், மாணவர் குடியிருப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளது.