Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, மலைகளின் இளவரசியாக அன்புடன் கொஞ்சப்படும் கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
மழையில் நனைந்தபடி அருவியில் கொட்டும் நீரினை கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் அதை அனுபவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் சூப்பராக மழை பெய்து வருகிறது. இதனால் மண் மட்டுமல்லாமல் மக்களின் மனதும் சேர்த்து குளிர்ந்து போய்க் காணப்படுகிறது. மழையை மக்கள் அனுபவித்து ரசித்து வருகின்றனர். சில இடங்களில் கன மழையாக பெய்து மக்களை டென்ஷனாக்கியும் வருகிறது இந்த மாமழை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழையாகவும்,சாரல் மழையாகவும் மாறி மாறி தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நீரோடைகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வருவோர் வெள்ளநீர்வீழ்ச்சியை ரசிக்காமல் போக மாட்டார்கள். தற்போது அதிக அளவில் நீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் அருவி அருகே சென்று அருவியில் கொட்டும் நீரின் முன்பாக நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் மழை தொடர்வதால் கடும் குளிர் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
என்னங்க.. வாங்கங்க.. கிளம்பிக் கொடைக்கானலுக்குப் போய்ட்டு வருவோம்!