Tamil Poem: திமிரானவள்!

Su.tha Arivalagan
Jul 13, 2026,01:38 PM IST

- கொடைக்கானல் ப.வினு


திமிரான பெண் என்று

முத்திரை குத்தி...

வேடிக்கை பார்க்கிறது

இந்த உலகம்!


அவள் நிமிர்ந்து நடக்கும்

ஒவ்வொரு அடியிலும்,

யாரோ மிதித்த

வலிகள் ஒளிந்திருப்பது

இந்த உலகத்திற்குத் தெரிவதில்லை!


உதட்டுச் சிரிப்பை

மூடி மறைத்து,

உள்ளுக்குள் அழுத

நாட்களின் மிச்சம்தான்...

இன்று அவள் அணிந்திருக்கும்

திமிர் என்னும் கவசம்!




நெருப்பில் வெந்தவள்தான்

சிற்பமாய் நிற்கிறாள்...

துரோகங்களைச் சுமந்தவள்தான்

துணிச்சலாய் மாறுகிறாள்!


அவள் காட்டுவது

தலைக்கனம் அல்ல,

இனி எவனுக்கும்

தலைவணங்கக் கூடாது என்ற

தற்காப்பு ஆயுதம்!


பூக்களைக் கசக்கிய

மனிதர்களுக்கு மத்தியில்,

முள்ளாய் மாறுவதைத் தவிர

வேறென்ன வழி இருக்க முடியும்

ஒரு பெண்ணுக்கு?


அவள் திமிரைப் பார்க்காதே...

அந்தத் திமிரைக் கொடுத்த

வலியின் வரலாற்றைப் பார்!

அப்போது புரியும்...


அவள் அகந்தை கொண்டவள் அல்ல,

அடிபட்டு எழுந்த

மகா சக்தி என்று!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)