கோடாங்கி (உண்மை சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு திகில் தொடர்-1)
- கவிஞர் க. முருகேஸ்வரி
அன்றொரு நாள் விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுது ...
திடீரென்று ஓர் அலறல் சத்தம்......அந்த குக்கிராமத்தில் யார் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் ஊருக்கே வெளிச்சம்.....
அந்த அலறல் சத்தத்தை கேட்டு ஊர்மக்கள் ராமாயி வீட்டை நோக்கி ஓடினார்கள். என் பிள்ளைய எங்க? என் மகள எங்க? னு உரக்கக் கத்திக் கொண்டு இருந்தாள் ராமாயி. கோவிலுக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்கே அவ காணாம போய்ட்டா....என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தான் முத்து... ராமாயி மருமகன்.
மடத்துக்கு பக்கத்துல இருக்குற ஆலமரத்துல கட்டி வச்சுட்டு ஊர் பெருசுங்க எல்லாம் புலன் விசாரணை......
அடி தாங்க முடியாமல் உண்மையை உளறுகிறான் வள்ளியின் கணவன் என்னும் கயவன்...
மாட்டு வண்டி கட்டி கிட்டு பராமத்துப்பட்டி ஜனங்க எல்லாம் அவங்க குலதெய்வம் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருந்தனர்.
பராமத்துப்பட்டி மட்டும் அல்ல... அங்கே சுற்றி இருக்கும் நிறைய கிராம மக்களுக்கு அந்த பெரியசாமி தான் குலதெய்வம் கோவில்.
அய்யங்கிரி கிராமம். அங்கு தான் பெரியசாமி கோவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் அய்யங்கிரி கிராமம், மிகவும் அழகான பச்சைப்பசேலென்று பார்ப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஒரு மலைக்கிராமம்.
மலையடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியே கரடு முரடான பாறைக் கற்கள் மீதும் வழுக்கும் பாறைகள் மீதும் ஏறி... இடையில் இருக்கும் வட்டாறுவையும் தாண்டி.....ஓ....வென்று கொட்டும் சின்னருவியை சிறிது நேரம் ரசித்து விட்டு.... அதில் இருந்து ஓடும் தண்ணீரை ஒரு வாய் அள்ளிக் குடித்து...அத்தனை களைப்பையும் ஆத்தி விட்டு.... மீண்டும் இரவில் சிங்கம் புலி நடமாடும் மலங்காட்டுப் பகுதியில் மூச்சிரைக்க நடந்து சென்று.....அதோ தெரியுது பாரு படிக்கட்டு ...அதுல ஏறிட்டா போதும் பெரியசாமி கோவில் வந்திடும் னு பெருசுக சொன்னதக் கேட்டு
அம்பது படிக்கட்டு ஏறிப் பார்த்தா நம்ம பெரியசாமி கோவில் சுவர் மட்டும் தெரியும்.
அடுத்த அம்பதாவது படிக்கட்டு ஏறினால் பேருக்கேற்றார் போல் பெரிய லிங்கம்..... அவ்வளவு அழகாக இருக்கும்,...... பெரியசாமி என்னும் பெரியலிங்கசாமி..... ஆம் அது ஒரு சிவன் தலம்.
மலையடிவாரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் ஏறினால் பெரிய லிங்கசாமியைத் தரிசிக்கலாம்.... பெரியசாமி விரும்பினால் தான் அங்கு செல்ல முடியும் என்பது ஐதீகம்...
அங்கே கீழே மண்டபங்கள் கட்டி விடப்பட்டு இருக்கும்.பெரியசாமி கோவிலுக்கு வருபவர்கள் அந்த மண்டபத்தில் இளைப்பாறிவிட்டு...
விடியும் முன்னரே எழுந்து அங்கேயே அடுப்பு மூட்டி கொண்டு வந்து இருக்கும் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம்.சாப்பிட்டு முடித்த கையோடு மலை ஏறத் தொடங்கி விடுவர்....
பராமத்துப்பட்டி மக்கள் இரவு வந்து சேர்த்தனர்.இளசுகளும் பொடுசுகளும் பேசிச் சிரிக்கும் சத்தமும்
மாட்டு வண்டியில் இருந்து பாத்திர பண்டங்களை இறக்கும் சத்தமும் சிறிது நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது.அரைமணி நேரத்துக்கு எல்லாம் அத்தனை சப்தமும் அடங்கிப் போய் நிசப்தம் மட்டுமே நிலவியது.
கும்மிருட்டு.....
மலையைச் சுற்றிலும்...... காரிருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.
தூரத்தில் சலங்கை சத்தம்......ஜல்..ஜல்....
திடீரென்று சத்தம் மிக அருகில்...... கை நிறைய கண்ணாடி வளையல்...
நெற்றியில் வட்டப் பொட்டு...
வகிடு எடுத்து வாரிய பின்னல்....
அது ஒரு
சின்னஞ்சிறு சிறுமி ..
அந்த இருட்டிலும் பளீரென்று தெரிந்தது அந்த முகம்...
வள்ளி..வள்ளி....
எழுந்திரு மா..... கணீர் கணீர் என்று ஒலித்த அந்தக் குரல் மாமலையில் பட்டு எதிரொலித்தது...வள்ள்ளி.... வள்ள்ளி.... எழுழுந்ந்திதிருருமா...
(தொடரும்)
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).