ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
- கவிஞர் க.முருகேஸ்வரி
விடியற்காலையிலேயே மழை வர்ற மாதிரி இருக்கே....
யம்மா வெளியே காயுற துணிய எடுத்துட்டு வா
அத்த.,...சின்னவனக் குளிப்பாட்டிட்டு இருக்கேன் அத்த
சரிம்மா.... இன்னிக்கு தான் தூத்தல் அதிகமா இருக்கேமா...பிள்ளைக வீட்ல இருக்கட்டுமே...
அத்த...உங்க மகனப் பத்தி தான் தெரியும்ல...என்ன தான் வைய்வாரு அத்த...
அதுவும் சரிதான்
பள்ளிக்கூடம் போய் படிக்கிறதுல எல்லாம் செல்லம் இருக்கக்கூடாது...
உண்ணச் செல்லம்
தின்னச் செல்லம் இருக்கலாம்...
மகாலிங்கம் அய்யனாரு...கெளம்பிட்டீங்களாடா
வந்துட்டாரு அத்த....
மாமா...கெளம்பிட்டாய்ங்க மாமா...செத்த இருங்க... ரெண்டு இட்லிய ஊட்டி விட்டுட்டு அனுப்புறேன்....
சரிம்மா... எனக்கும் ஒரு சொம்புல நீச்சதண்ணி கொண்டு வாம்மா...
நீச்சதண்ணிய குடித்து விட்டு பிள்ளைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் மாணிக்கம்....
மாமா ஒரு நிமிஷம்....
சொல்லும்மா...
காதுகுத்துக்கு எல்லா இடத்துலயும் பத்திரிகை வச்சாச்சு...
கள்ளிப்பட்டிக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோம் மாமா...
அதுக்கென்ன ...நீ கெளம்பி ரெடியா இரு....
கள்ளிப்பட்டிக்கு போய்ட்டு வரலாம் வள்ளி....
வள்ளி...
ஆம் வள்ளி கள்ளிப்பட்டிக்கு பக்கத்து கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகன் மாணிக்கத்தைத் திருமணம் செய்திருக்கிறாள்
அவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள்...
கோடாங்கி வள்ளியின் மீது இருந்த துர்சக்திகளை அவரின் அனுபவித்தால் யார் என்னவென்று விசாரித்து செய்ய வேண்டியதை செய்து விரட்டியடித்துவிட்டார்
வள்ளி சுய நினைவுக்கு திரும்பியவுடன்
கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல்நிலை தேறியது...
இரண்டு மாதங்கள் சின்னம்மா வீட்டில் தங்கியவுடன் உடலும் மனமும் ஓரளவு தேறிவிட்டது
அந்த நிலையில் தான்...
ராமாயி படுத்த படுக்கையாகி விட்டாள்
வள்ளியை நினைத்து நினைத்து அவள் உடம்பு இன்னும் மோசமாகிக் கொண்டே போனது
சின்னம்மாவின் அண்ணன் மகன் தான் மாணிக்கம்....
சின்னம்மாவும்... சங்கையாவும் எடுத்த முயற்சியால்
வள்ளிக்கும் மாணிக்கத்திற்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது
ராமாயி தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் கண்ணை மூடி விட்டாள்.
வள்ளியை மகாராணி போல் கவனித்துக் கொள்கிறான் மாணிக்கம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா...என்ற தாய்மாமன் சங்கையாவின் மடியில் இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து காது குத்தியவுடன்....வலி தாங்காமல் அழுக... சின்னம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள் வள்ளி
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).