வள்ளி எழுந்திரு வள்ளி எழுந்திரு.. வா.. (கோடாங்கி.. திகில் தொடர்-2)
- கவிஞர் க. முருகேஸ்வரி
ராமாயி ஊர்ப் பெரியவர்களிடம் .... கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகலையே....கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறேனு சொல்லி கூட்டிட்டுப் போய் கொன்னுபுட்டானே படுபாவி! என் புள்ளைக்கு இப்படி ஒரு நெலமையா வரணும்....இந்த அநியாயத்த கேட்க யாரும் இல்லையா?
ஆத்தா மாரி...என் பிள்ளைய நீயாவது காப்பாத்தியிருக்க கூடாதா? வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி குய்யோ முறையோ என்று கத்தி அழுது கொண்டு இருந்தாள்.
வள்ளியின் மீது ராமாயிக்கு அளவு கடந்த அன்பு உண்டு. ஒரே மகள்....செல்லமகள்.... கணவரை இழந்த ராமாயி....தன் மகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கிராமத்துத் தாய். அவளுக்கு எல்லாமே வள்ளி தான்....
அந்த கிராமத்தில் வள்ளிக்கு மட்டுமே காலம் கடந்த திருமணம்.... வள்ளியைப் பிரிய முடியாமல் ஏதாவது காரணம் சொல்லி திருமணத்தைத் தள்ளி போட்டுக் கொண்டே போனாள் ராமாயி....
வேறு வழியின்றி ஊர் வாயை மூட இந்த திருமணத்தை நடத்தினாள். கடைசியில் அவள் பயந்தது போலவே நடந்து விட்டது. அவளால் இந்த வலியையும் வேதனையையும் தாங்க முடியவில்லை...
ஊர்ப் பெரியவர்கள் முத்துவைப் பக்கத்து டவுனில் இருக்கும் போலிஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
சங்கையா....எந்திரிப்பா. எந்திரிப்பா......வீரனும், சுப்பையாவும் வெறகுக்குப் போகட்டும்.அதுக்குள்ள நாம அடுப்ப ரெடி பண்ணிடலாம்..... ரெண்டு மூணு பொம்பளயாளுகள எழுப்பி தண்ணி எடுத்துட்டு வரச் சொல்லுப்பா என்றார் கணேசன். சரி வாத்தியாரே....என்றான் சஙகையா. கணேசன் பராமத்துப்பட்டி கிராமத்தில் ஓரளவு படித்த விவரம் தெரிந்த ஆள்.கொஞ்ச நாள்... முதியோர் கல்வி திட்டத்தில் ஆசிரியராக இருந்ததால் ... அவரை அன்போடு வாத்தியார் என்று அழைப்பார்கள் அவ்வூர் மக்கள்.
பலத்த காற்று வீசியது.....அடிக்கிற காற்றில்...... சர..சரவென இலைகள் இங்கும் அங்கும் பறந்தன....லேசாக அந்த இலை தழைகளுக்கு இடையே..ஒரு கறுத்த முகம் தெரிந்தது......திடீரென்று இடி சத்தத்துடன் பெருமழை பெய்தது..... மழைத்துளி வள்ளியின் முகத்தில் பட்டுத் தெறிக்க....வள்ளி மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தாள்.
வள்ளி எழுந்திரு வள்ளி எழுந்திரு வா போகலாம் என்ற குரல் வள்ளியின் காதில் மெலிதாய்க் கேட்டது.... வள்ளி குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள். தன் அருகில் ஒரு சிறுமி நின்று கொண்டு இருப்பது மங்கலாகத் தெரிந்தது..... வள்ளி மெதுவாக எழுந்திருக்க முயற்சி செய்தாள்... முடியவில்லை.....
வள்ளியின் மீது ஒரு சிறு பாறாங்கல் இருந்நது... சிறுமி பார்வை பட்ட அடுத்த நொடி..அந்தக் கல் உருண்டு ஓடியது. வள்ளி முனகலுடன் மெதுவாகத் தட்டு தடுமாறி எழுந்தாள். கீழே விழப்போன வள்ளியை சிறுமி கைத்தாங்கலாகப் பிடித்தாள். வள்ளியால் இப்போது நிற்க முடிந்தது.வள்ளி வா போகலாம் என்ற சிறுமியின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டு கொட்டும் மழையில் நனைந்தபடியே பிரமை பிடித்தவள் போல் சிறுமியோடு நடந்து சென்று கொண்டிருந்தாள் வள்ளி..
(பேய் வரும்)
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).