ராசாத்தி நீ என்ன சொல்ற.. (கோடாங்கி.. திகில் தொடர்-6)

Su.tha Arivalagan
Mar 13, 2026,10:18 AM IST

மறுநாள் காலை....

வள்ளி வீடு எது என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்து‌ பார்த்தார் டீக்கடை ஆறுமுகம்.


பதறியடித்து 

ஓடிப்போய் ராமாயி வீட்டைத் தட்டினார் ஆறுமுகம். கதவைத் தெறந்த ராமாயி 

வள்ளி....... என்று கத்தினாள் ராமாயி....


கிராமத்தில் உள்ள ஆண்களும்‌ பெண்களும்‌ வள்ளியின் வரவை அறிந்து ஓடி வந்தார்கள்,..


வள்ளி வந்துட்டியாடி.. என் ராசாத்தி....

என் சாமி.... அம்மா கிட்ட‌‌ வந்துட்டியாடி.....

என்று‌  வள்ளியைக் கட்டியணைத்து‌‌ கண்ணீர்‌ விட்டுக் கதறினாள் ராமாயி.....




வள்ளியைப்‌ பார்த்த‌‌ அனைவருக்கும் கொலை நடுங்கியது.... அவ்வளவு அலங்கோலமாய் அவள் இருந்தாள்...


நீளமான ஜடையும்... நீண்டு தொங்கும் மல்லிகைப்பூ சரமும்....சிரித்த முகமும்...துடுக்குப் பார்வையுமாய் வலம் வந்த வள்ளியைப் பார்த்து பழகிய கண்கள் எல்லாம்....வள்ளியின்‌ இந்தத் தோற்றத்தைப் பார்த்து தங்களை அறியாமலேயே குளமாகின.


பாருங்க எல்லாரும் பாருங்க..என் வள்ளிய‌ப் பாருங்க .. என் வள்ளி வந்து நிக்குற‌ கெதிய‌ பாருங்க.... இதெல்லாம் பார்க்குறதுக்கா நான்  உசுரோட இருக்கேன்....

இந்த அநியாயத்தக் கேக்க யாரும் இல்லையா.....

கத்திக் கூப்பாடு போட்டாள் ராமாயி...


ராமாயி ...இப்போ அழுது‌ என்ன ஆகப் போகுது....

அதான் அந்தப் பயல போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிட்டோம்ல....

விடு... இனி ஆக வேண்டிய வேலைய பார்ப்போம்.... பிள்ள செத்துப்பிழைச்சு வந்துருக்கு....


அத மொதல்ல என்னன்னு பார்ப்போம் ..


உடம்புல ஊர்ப்பட்ட காயம் இருக்கு....வலி‌யத் தாங்கிக்ஙகிட்டு‌ தான் பிள்ள‌ ஒக்கார்ந்திருக்கு... அத ஆஸ்பத்திரியில சேர்க்குற‌ வழிய பார்ப்போம் என்றார் கருப்பையா....


சங்கையா வாத்தியாரிடம்...

வாத்தியாரே... சாமியக் கும்பிட்டுட்டு ஊருக்குக் கெளம்புங்க... எங்க சிய்யான பத்திரமாக் கூட்டிட்டுப் போங்க...

நான்‌‌ இப்படியே கள்ளிப்பட்டி ஒரு எட்டு போய்ட்டு வந்திர்றேன்.


பெரியம்மா ஒத்த ஆளா‌ கெடந்து கஷ்டப்படும்...நெலமை சரியாகுற‌ வரைக்கும் கூடமாட ஒத்தாசையா இருந்துட்டு வாரேன் வாத்தியாரே....

என்றான் சங்கையா,....


சரிப்பா...நீ‌ போய்ட்டு என்னா‌‌ ஏதுனு‌ தகவல் சொல்லு என்றார் வாத்தியார்....இருவரும் பேசிக்கொண்டே ராசாத்தியிடம்‌ சென்றனர்.


ராசாத்தி மட்டும் அதிர்ச்சியில் இருந்து மீள‌‌ முடியாமல் உறைந்து கிடந்தாள். இதைக் கவனித்த வாத்தியார் அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும்போதே .


ராசாத்தி குறுக்கிட்டு....

மாமா...மாமா...

நான் ஒன்னு‌ சொன்னா நம்புவீங்களா என்றாள்.


குழப்பத்துடன் ராசாத்தியப் பார்த்தார்‌‌ வாத்தியார்...

சொல்லு ராசாத்தி என்றார் அவர்.

மாமா நீங்க கூட்டிட்டு வந்தது வள்ளி இல்ல மாமா என்றாள்‌ ராசாத்தி...


வாத்தியாருக்கு தூக்கி வாரிப் போட்டது...

ராசாத்தி என்ன சொல்ற.... வள்ளி இல்லேனா வேற யாரு  அது என்றார் வாத்தியார்....

அதுவா...அதுவா....

அது...அது‌ வந்து...அது ஒரு.....


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).


முந்தைய அத்தியாயங்கள்: 4 5