"நீ எங்க வந்திருக்க தெரியுமா?".. (கோடாங்கி.. திகில் தொடர் - 7)

Su.tha Arivalagan
Mar 20, 2026,10:28 AM IST

வள்ளியைப் பக்கத்து டவுனில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனார்கள். ஊசி, மாத்திரை மருந்து என சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாள் வள்ளி.


ஆனாலும் வள்ளியின் முகத்தில் பழைய பொலிவு இல்லை.தனது வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டது என்ற நினைப்பு அவளைப் பாடாய்ப் படுத்தியது.தன் அம்மாவுக்காக எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள் வள்ளி.


இராமாயி தன் மகளிடம் மெல்ல என்ன நடந்தது என்பதை விசாரிக்க ஆரம்பித்தாள்.


வள்ளி தன் அம்மாவிடம் நடந்ததைக் கூறினாள்.தன்னை முத்து பெரியசாமி கோவிலுக்குக் கூட்டிட்டுப் போனதாகவும்,மலையேற ஆரம்பித்து சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் பேச்சில் மாற்றம் தெரிந்ததாகவும் கூறினாள்.பித்துப் பிடித்தவன் போல் அவன் பேசியது தனக்கு பயத்தை ஏற்படுத்தியது என்றும்.., பின்னர் திடீரென தன்னை அடிக்க ஆரம்பித்தாகவும் கூறி அழுதாள்...தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டு...தன்னை மலையிலிருந்து தள்ளி விட்டதாகவும்....அதற்குப் பிறகு யாரோ ஒரு குழந்தை  தன்னைக் கைபிடித்து அழைத்து வந்து‌ பராமத்துப்பட்டி மக்களிடம்‌ சேர்த்த தையும்....அங்கு அவள்‌‌ அண்ணன் சங்கையாவைப் பார்த்ததையும் கூறினாள் வள்ளி...




அதைக் கேட்ட ராமாயி....

வந்தது சின்னக் குழந்தை இல்ல வள்ளி...ஆத்தா மாரி தான்...உங்க அண்ணன்‌ கிட்ட உன்னக் கைபிடிச்சு கூட்டிட்டு வந்து விட்டிருக்காமா ....என்று மாரித்தாய்க்கு நன்றி கூறினாள்‌ ராமாயி....


ராசாத்தி என்ன சொல்றமா...

வள்ளி னு தான சங்கையா சொன்னான்....நீ இல்லேனு சொல்ற...பெறகு யாரு அந்தப் புள்ள‌ என்றார் வாத்தியார்.

மாமா... பேச்சியம்மன் என் மேல இருக்குனு உங்களுக்குத் தெரியுமில்ல...

அப்ப எனக்குத் தெரியாதா அது யாருன்னு என்றாள் ராசாத்தி...


திடீரென்று ஓங்கிய குரலில்...

டேய் ...நான் சொல்றத நல்லாக் கேட்டுக்க...அந்தக் கன்னி....அந்தக் கன்னி விழுந்த இடத்துல சில கழுதைக அத் தொட்ருச்சுப்பா...

எப்டி சொல்வேன்....டேய்..அந்தக் கன்னி உசுருக்கே ஆபத்துடா...

போ...போ...அந்தப் பிள்ளைய காப்பாத்து...


என்ற பேச்சியம்மனிடம் கணேசன் விபூதி பிடித்து வாங்கிக் கொண்டு, பெரியசாமி கோவில் விபூதியையும் ஒரு பேப்பரில் மடித்து சங்கையாவிடம் கொடுத்து அனுப்பினார்.


கருப்பையா வள்ளி ஏதோ காத்து கருப்பு அடிச்சது போல இருக்கா...

முருகேசன‌ கொஞ்சம் வரச் சொல்லுயா...

மொகத்துல தண்ணிய‌‌ தெளிச்சு விபூதி பிடிச்சு போட்டு விட்டுட்டு போகட்டும் என்று நலம் விசாரிக்க வந்த கருப்பையாவிடம் கூறினாள் ராமாயி.


மறுநாள் ராமாயி வீட்டுக்கு முருகேசனை அழைத்து வந்தார் கருப்பையா...


முருகேசன்‌ உள்ளே நுழைந்ததும் வள்ளி என்ன‌ வேணும்..யார் நீங்க? என்றாள்.


இராமாயி வள்ளியைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். வள்ளியின்‌ கண்களில் ஒரு மாற்றம்‌ தெரிந்தது.

இது வள்ளியின் கண்ணே இல்லை...


முருகேசன் வள்ளி‌யின் முன்னே சென்று 

நீ‌ யாரு? எந்த ஊரு...இங்க உனக்கு என்ன வேலை.. நீ எங்க வந்திருக்க தெரியுமா?என்றார்.


வள்ளி சற்றும் யோசிக்காமல் "சொல்ல முடியாது".... என்று கூறிவிட்டு சத்தமாகச் சிரித்தாள். 


அந்த சிரிப்பொலி....அந்த சிரிப்பொலி.!


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).


முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3 4 5 6