தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

Su.tha Arivalagan
Jan 11, 2026,01:59 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில்  நாச்சிமுத்து முதலியார் மற்றும் கருப்பாயி அம்மாவிற்கு மகனாக பிறந்தார்.


குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.


தேசபந்து இளைஞர் மன்றத்தை நிறுவி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்காற்றினார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.




1932 ஜனவரி 10 அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட தேசிய கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார்.


ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் ஜனவரி 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கில் கொள்ளி வைத்தனர்.


குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார்.


தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.