கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: தகவல் வெளியிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

Su.tha Arivalagan
Nov 18, 2026,03:23 PM IST

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த அலுவல்ரீதியான தகவல்களை வெளியிடக் கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   


கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருபவர் வி.எஸ்.பாபு. இவர் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஆகஸ்ட் மாதம் முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்த உண்மையான நிலவரத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு தரப்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பிலோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தொகுதி மக்களிடையே குழப்பமும், தங்களது மக்கள் பிரதிநிதியின் நலன் குறித்த கவலையும் நிலவி வருகிறது. 




இந்நிலையில், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து இதுவரை எந்தவொரு அலுவல் ரீதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வது தொகுதி மக்களின் உரிமை என்ற அடிப்படையில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களைக் கோரி அரசுத் தரப்பில் ஏற்கெனவே மனு அளித்திருந்ததாகவும், ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுத் தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்றும் மனுதாரர் தேவராஜன் தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.   


எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் தொகுதி மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கருத்தில் கொண்டு, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்த அலுவல்ரீதியான அறிக்கையை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை குறித்து தகவல் அறியும் வகையில் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் சார்ந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.