வி.எஸ்.பாபு மறைவு: ஆளுநர்,முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Su.tha Arivalagan
Nov 19, 2026,05:09 PM IST

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) உறுப்பினர் வி.எஸ்.பாபு (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.   


முதல்வர் விஜய் :




வி.எஸ்.பாபுவின் மறைவு குறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களோடு மக்களாகப் பழகியவர் அவர். அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையைப் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   


ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் :


தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். வி.எஸ்.பாபுவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.   


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி:


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் என்று செய்திகள் வெளியான நிலையில், அவரது திடீர் மறைவு அதிர்ச்சி தருகிறது. வி.எஸ்.பாபுவை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி :


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  


அண்ணாமலை இரங்கல்:


'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   


மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் மறைவு, கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.