கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!
- பக்தித் தென்றல் பாவை.பு
மார்கழி மாதம் முழுவதுமே விசேஷமான, மங்களகரமான, இறைவழிபாட்டுக்குரிய மாதமாக உள்ளது. ஏனெனில் இது பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மாதம். அதனால் தான் ஆண்டாள் நாச்சியார் இந்த மார்கழி மாதத்தில் தான் திருப்பாவை எனும் 30 பாசுரங்களை நமக்கு மாலையாக தொகுத்து கொடுத்துள்ளார். அதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தும் உள்ளார்.
ஆண்டாள் நாச்சியார் பாவை நோன்பினை இந்த மார்கழி மாதத்தில் தான் நோற்றார். அதுவும் கிருஷ்ணனையே கணவனாக வேண்டி நோன்பு நோற்று தான் அவனுள் ஐக்கியம் ஆகிறாள் என்றால், இந்த மார்கழி மாதத்தின் சிறப்பும்,நோன்பின் வலிமையும் அறிவீர்களாக.
பொதுவாக பாவை நோன்பினை இரண்டு காரணத்திற்காக நோற்பார்கள். ஒன்று உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ வேண்டியும்,உலகம் செழிக்க மழை வேண்டியும், *மற்றொன்று* தாங்கள் விரும்பக்கூடியவரையே கணவனாக வரவேண்டும் என்றும் அல்லது மனம் விரும்பியவாறு கணவன் வேண்டியும் நோற்பார்கள்.
ஆண்டாள் தான் ஒரு ஆயர்பாடி கோபியாக, ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும்,இங்கு இருக்கக்கூடிய வடபத்ரசாயியை கிருஷ்ணனாக நினைத்து கொண்டு நோன்பு நோற்க்கிறாள்.
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரத்தை மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு பாடலாக கிருஷ்ணனுக்கு பாடி சமர்பிக்கிறாள் ஆண்டாள்.
இதில் 27 வது பாசுரநாளே *கூடாரவல்லி*. மார்கழி நோன்பின் ஆரம்பத்தில் இருந்து 26 பாசுரங்கள் வரை ஒழுக்கம் சிரத்தை கட்டுப்பாடு இவை அனைத்தின் பலனாக மாறும் தருணமே கூடாரவல்லி. இறைவனிடம் ஆண்டாள் பொன்னையோ பொருளையோ கேட்கவில்லை அதற்கு மாறாக அவள் கிருஷ்ணனை அடைவதையே கேட்கிறாள்.
ஆண்டாள் கடுமையான நோன்பு மேற்கொண்டதன் காரணமாக அவரின் உண்மையான அன்பை கண்ட *அரங்கன்* ஆண்டாளை மணந்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். அந்தநாளே கூடாரவல்லி திருநாளாகும்.
இந்நாளில் வைகுண்ட ஏகாதசி போன்று பல வைணவ தலங்களில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். முக்கியமாக ஸ்ரீ வில்லிபுத்தூரார், திருவரங்கம், திருமலை போன்ற ஆலயங்களில் வெகு விமரிசையாவே கொண்டாடுகிறார்கள்.
திருவரங்கனின் அருளைபெற்ற மகிழ்ச்சியில் ஆண்டாள் பாவை நோன்பினை எப்படி நிறைவு செய்ய போகிறார் என்பதே 27ஆவது பாசுரம்.
பாவை நோன்பு தொடக்கத்தில் நெய்யுண்ணோம் பாலுண்ணோம், கண்களுக்கு மையிட்டு கொள்ள மாட்டோம், அழகான ஆடை அணிந்து எங்களை அழகுபடுத்தி கொள்ள மாட்டோம், உன்னை அடைவதையே நோக்கமாக கொண்டு தவம் போல் இந்த நோன்பினை நோற்க்கப் போகிறோம் என முந்தைய பாசுரங்களில் கூறிய ஆண்டாள், இப்போது நோன்பை நிறைவு செய்யும் தருவாயில் தங்களை எப்படி எல்லாம் அலங்கரித்துக் கொள்ள போகிறோம் என்றும் கூறுகிறார்.
அவ்வாறு பாவை நோன்பின் நிறைவு தருவாயில் அரங்கனின் அருளைப் பெற்ற ஆண்டாள் தன்னை அலங்கரித்து கண்ணாடி (பித்தளையால் செய்யப்பட்டது) முன் நின்று தனது அழகை ரசித்த போது அங்கு ஆண்டாளுக்கு பதில் அரங்கனே தோன்றினார். என்றால் ஆண்டாள் தனது பக்தியாலும் காதலாலும் அந்த அரங்கனையே ஆண்டாள் என்பது புலனாகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கூடாரவல்லியில் கன்னி பெண்கள் திருமணம் வேண்டி, அவர்கள் விரும்பும் வண்ணம் திருமண வாழ்வு அமைய, பாவை நோன்பு இருந்து அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் சன்னதியில் ஆண்டாளின் திருப்பாவை முழுமையாக படித்து, 27வது பதிகத்தை எத்தனை முறை பாராயணம் செய்ய முடியுமோ அவ்வளவு முறை மனமுருகி பாடி வேண்டினால் வேண்டியதை வேண்டியவாறு வழங்குவார்கள் அரங்கனும் அவரை ஆண்ட ஆண்டாளும்.
அன்று இல்லத்தில் பாலில் அரிசி இட்டு அதோடு வெல்லம் நெய் சேர்த்து அக்காரவடிசில் எனும் சர்க்கரை பொங்கல் செய்து ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் நெய்வேத்தியம் செய்து (அந்த உணவை பிறருக்கு கொடுக்கும் போது, வாங்குபவரின் கைவழியாக முழங்கை வரை நெய் வழிந்தோடும் அளவிற்கு தயார் செய்து உன்னுடன் சேர்ந்து அனைவரும் உண்ண போகிறோம் என்று எல்லையில்லா மகிழ்ச்சியில் கூறுகிறார் ஆண்டாள்) நாமும் அவர்களது அருளைப் பெறுவோம்.
இந்தாண்டு கூடாரவல்லி ஜனவரி 11.1.2026 (மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை) இந்நாள் மார்கழி நோன்பு நிறைவை நெருங்கும் கட்டம். பக்தர்கள் பூர்ண சர்ணாகதியுடன் இறைவனை நெருங்கும் நாள்.. கூடாரவல்லி வழிப்பாட்டின் சிறப்பு *வேண்டாமை* அதாவது பொருட்களை கோரும் மனம் விலகி அருளையும் ஞானத்தையும் மட்டுமே நாடும் நிலை. இந்த பாசுரம் நோன்பின் இறுதி நாட்களுக்கு தயார் செய்யும் பக்திநிலை.
கூடாரவல்லியை எப்போதும் அதிகாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்தது. (அதிகாலை 4.00-6.00) க்குள் ஆலயங்களில் விஸ்வரூபதரிசனம் பார்த்த பிறகு திருப்பாவை பாராயணம் சிறப்பு.
கூடாரவல்லியில் கூடாத திருமணமும் கைகூடும் என்பது வாக்கு.