கண்ணனின் லீலைகள்!

Su.tha Arivalagan
Sep 04, 2026,12:49 PM IST

- எம்.கே. திருப்பதி, திருப்பூர்


தேவகி மகனாய்

சிறையில் பிறந்து

அசோதை மகனாய்

அரண்மனை தவழ்ந்து 


பால்குடி மறவா

பச்சைப் பிள்ளையாய் 

தாய்மடி தன்னை

தாங்கிய போதும்...


வாதனை ஊட்டும்

வாதனை உயிரை 

பொக்கென கவர்ந்தவன்!


கொக்கென வந்த

கொடிய அரக்கனை

தொக்கென சரித்தவன்!




நிலபாரம் குறைக்க -  யது 

குலமாந்தர் மரபில் 

களமாட வந்தவன்!


வாதை போக்கிய

வன்களப் போரில் 

கீதை என்றொரு

பாதை தந்தவன்!


கோவிந்தா நீ...

கொட்டிய மழையில்

கோபாலரைக் காக்க 

குன்று ஒன்றை

குடையாக்கினாய்!


கோவர்த்தன கிரியை

கோவிலாக்கி -  அந்த

குன்றின் நிழலை

கோயில் நடையாக்கினாய்!


எங்கள் கண்ணன்

திருட்டுக் கண்ணன்!

எங்கள் கண்ணன்

இருட்டுக் கண்ணன்!


கிருஷ்ணா கிருஷ்ணா  -- நீ

ராதா கிருஷ்ணா!

மண்ணுயிருக் கெல்லாம் நீ -- 

மாதா கிருஷ்ணா!


வேந்தே வேந்தே -- நீ

துவரை வேந்தே!

விண்வேந்தை வெட்கச் செய்த

துளசி வேந்தே!


கோவே கோவே --  நீ

கோவின் கோவே!

அயனின் சதியை -- நீ 

அழித்த கோவே!


அச்சுதா - ஆண்டவா!

உன்னையே நீ காட்டி - உன் 

அன்னையை நீ

அரட்டலாமா?


பெற்றதாய் மருள -- உன்

பேருருவம் காட்டி -  அந்த 

பேதையை நீ மிரட்டலாமா?


ஆழி நீரில் 

ஆனந்த சயனம் 

கொள்பவன் நீயே!

கண்ணா!

தாழி வெண்ணையிடம் --  நீ 

தடுக்கி விழலாமா?


அப்படி நீ

அகப்படும்போது

அசோதைத் தாயிடம் 

அப்பிராணி  பிள்ளை போல் 

அடம்பிடித்து அழலாமா?


பரந்தாமா பரந்தாமா! -  நீ 

நலந்தானா நலந்தானா?


பாவி துரியன் உன்னை

பாதாளத்தில் தள்ளினான்!

அந்த

நன்றி கொன்றவன்

நலிந்தானே நலிந்தானே!


சராசந்தன் உன்னை 

சன்மப் பகையாய் எண்ணினான்!

பகவானே உன்னருளால் --

பாண்டு பிள்ளை -  அவனை 

மாண்டு போகப் பண்ணினான்!


அவைதனில் உன்மேல் 

நவைதனை சொல்லி

சீறிச் சினந்தது 

சிசுபாலன் உக்கிரம்!


பிழைகள் நூறு என்றதும்

பித்துப் பிள்ளை

தலை எடுத்தது - உன்

சுதர்சன சக்கரம்!


குவலையா பீடம் என்னும் 

குஞ்சரத்தை

கோபாலா  --  நீ உன்

வெஞ்சினதால் முடித்தாய்!


அதன்பின்

அன்னையின் அண்ணன் 

அதர்ம ரூபனை --  அவன்

நெஞ்சிலடித்து மடித்தாய்!


அம்மவோ! நீ  -

நிகழ்த்திய லீலைகள் 

நிகழ்ச்சி

நிரலில் அடங்குமா?


நீள நானதை --

நிதமும் கதைத்தாலும் 

கண்ணா உன் புகழ் -  என் 

குரலில் அடங்குமா?




பார்த்தசாரதியே! மயில்

பீலி -  கோர்த்தசாரதியே!

வேண்டாம் போரென

வேர்த்த சாரதியே!


அறம் வெல்லுமென

ஆர்த்த சாரதியே!

பகைக் களத்தை -  வெறுமனே

பார்த்த சாரதியே!


நீ - அர்ஜுன் எனும்

பார்த்தன் சாரதியே!

எங்கள் கவலைகளை 

வாங்கிக்கொள்ளும் வாரிதியே!


வணங்குகிறேன்

உந்தன் தாள்!

உய்யவை 

எந்தன் ஊழ்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)