கண்ணன் வந்தான் கவலை மறக்க!
- தி. மீரா, ஈரோடு
கண்ணன் வந்தான் எங்கள் இல்லம் கனிந்தது நெஞ்சம்,
காலடி வைத்தான் மெல்ல கமழ்ந்தது மஞ்சம்!
சிறிய பாதம் பதித்திடவே செழித்தது வாசல்,
சிரிப்பொலி கேட்டிடவே தீர்ந்தது ஏக்கம்
மயிலிறகின் வண்ணமென மழலைச் சிரிப்பு,
மாதவனின் அருளென மனதில் இனிப்பு
வெண்ணெய் திருடும் கண்ணனோ வீட்டினில் வந்தான்,
வெள்ளமென ஆனந்தம் உள்ளத்தில் தந்தான்
குழலிசை இல்லாமலே கூவினான் கண்ணன்,
குறும்புகள் செய்யாமலே கவர்ந்தான் கண்ணன்
தாமரைப் பாதங்கள் தரையில் பதிய,
தாயுள்ளம் பூவாக அன்பினில் மலர
கோகுலம் தேடவில்லை கோயிலும் வேண்டாம்,
கோபாலன் வந்தபின் குறையொன்றும் இல்லை
அவன் மெல்லிய புன்னகை அமுதமாய் பொழிய,
அகமெல்லாம் பக்தியின் அலைகளாய் எழிய
சின்னஞ்சிறு பாதத்தில் சிறப்புகள்ஆயிரம்,
செந்தாமரை முகத்தில் தெய்வத்தின் ஓவியம்
எங்கள் இல்லம் இன்று வைகுந்தம் ஆனது,
எங்கும் கண்ணன் நாமம் இசையாகப் பூத்தது
வந்தவன் குழந்தையல்ல வாழ்வின் வரமன்றோ,
வாசலில் வைத்த பாதம் வானத்தின் சுவடன்றோ
கண்ணன் வந்தான் எங்கள் இல்லம் களிப்போடு வாழ,
காலமெல்லாம் அவன் அருளில் கனிந்திடும் வாழ்வு.