குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

Su.tha Arivalagan
Apr 27, 2026,04:47 PM IST

- சொ.மங்களேஸ்வரி


மன்னர் ஆட்சி காலத்தில் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக குடவோலை முறைதான் இருந்ததாக உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. இம்முறை பண்டைய சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்பட்ட முறையாகும். தகுதியுள்ள நபர்களின் பெயர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு ஒரு குடத்தில் ,(அதாவது பானையில்) இடப்பட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிறுவனைக் கொண்டு குலுக்கல் முறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வந்த ஒரு நடைமுறை ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 16ஆவது நூற்றாண்டு வரை இருந்ததாக கல்வெட்டு கூறுகிறது.


உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைகுண்ட பெருமாள் கோவிலில் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்ட சிறந்த ஆவணம் ஆகும். அக்கால அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல தகவல்களை கல்வெட்டு தாங்கியுள்ளது. 


உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் மகா சபையானது அந்த அரசவையின் அரசாணைப்படி பொதுக்குழுவைக் கூட்டி, அரசாணையில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் படி விவாதிக்கப்பட்டு, 30 குடும்புகளுக்கான சபை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களின் தகுதி மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்குத்   தீர்வு காணப்பட்டது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்வர். கல்வெட்டுகளின் படி ஒவ்வொரு கிராமமும் குடும்புகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்புகளிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து, பொது சபைக்கு அனுப்பினர்.


உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் 30 வார்டுகள் இருக்க வேண்டும். அந்த 30 குடும்புங்களிலும் கீழ்கண்ட தகுதி உள்ளவர்களைத் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். போட்டியிட விரும்புவோருக்கு தகுந்த வயது குறிப்பிட்ட அளவு அசையா சொத்து, கல்வித் தகுதி ஆகிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. போட்டியிட விரும்பியவர்கள் கால் வேலி நிலத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டும். ( ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் ஆகும்.) அவ்வளவுக்கு இடம் வைத்திருப்பவர்கள் போட்டியிடலாம். சட்டப்பூர்வமாக, சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட சொந்த வீடு இருக்க வேண்டும். 35 வயதுக்கு மேல் மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மந்திரப் பிரமாணம் பற்றிய அறிவும், அதையே மற்றவர்களுக்கு கற்பிப்பதில் அனுபவமும் இருக்க வேண்டும். 




அரைக்கால் வேலி நிலத்தை மட்டுமே சொந்தமாக வைத்திருப்போர் ஒரு வேதம் மற்றும் நான்கு பாஷ்யங்களில் ஒன்றைக் கற்று,  மற்றவர்களுக்கு விளக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகத்தில் நிபுணத்துவம் மற்றும் அவர்களின் நற்பண்புகளுக்காகப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும்  தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளாக இருந்தது. நேர்மையான சம்பாத்தியம் மற்றும் தூய்மையான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். போட்டியிட விரும்பும் ஆண்டிற்கு முன்னதான மூன்று ஆண்டுகளில் ஏதேனும் ஒரு கிராமசபைக் குழுவில் பணியாற்றியவர்கள், அவ்வாறு பணியாற்றி அவர்களின் கணக்குகளை சமர்ப்பிக்காதவர்கள், அவ்வாறு பணியாற்றியவர்களின் உறவினர்கள் ஆகியோர் போட்டியிடத் தகுதியற்றவராகக் கருதப்பட்டனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து குடவோலைகளுக்கு பெயர் எழுதப்படும். 


உத்திரமேரூரில் உள்ள 12 தெருக்களில் ஒவ்வொரு வார்டும் தனித்தனியாக கட்டப்பட்ட 30 வார்டுகளுக்கும் தனித்தனி உறையில் இடப்பட்ட வாக்குச்சீட்டை தயார் செய்ய வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட உறைகள் ஒரு குடத்தில் வைக்கப்பட வேண்டும். குட ஓலைகளை எண்ணும் போது மகாசபையின் பொதுக்குழு முழு கூட்டம் இளைஞர்கள் மற்றும் வயதான உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் இருக்குமாறு கூட்டப்பட வேண்டும். அந்த நாளில் கிராமத்தில் இருக்கும் அனைத்து கோவில் பூசாரிகளும் எந்த விதிவிலக்கும் இன்றி பொதுக்குழு கூடும் உள் மண்டபத்தில் அமர வைக்கப்பட வேண்டும்.


கோயில் பூசாரிகள் நடுவில், அவர்களுள் மூத்தவரான ஒருவர் எழுந்து நின்று எல்லா மக்களுக்கும் தெரியும்படி மேல்நோக்கி அந்தப் பானையைத் தூக்கி அசைப்பார். ஒரு வார்டு அதாவது அதைக் குறிக்கும் பொட்டலம் அல்லது உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறியாத, அருகில் நிற்கும் ஒரு சிறுவனால் வெளியே எடுக்கப்பட்டு, நடுவரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட குடவோலைக்கு பொறுப்பேற்கும் பொழுது, நடுவர் 5 விரல்களைத் திறந்து உள்ளங்கையில் அதைப் பெறுவார். இவ்வாறு பெறப்பட்ட வாக்குச்சீட்டில் உள்ள பெயரை அவர் படித்து விடுவார். அவர் வாசிக்கும் வாக்குச்சீட்டை உள் மண்டபத்தில் இருக்கும் அனைத்து பூசாரிகளும் படிக்க வேண்டும். இவ்வாறு வாசிக்கப்படும் பெயர் கீழே வைக்கப்படும். அதேபோல 30 வார்டுகளுக்கும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.


இந்த பொதுக்குழு சம்வத்சர வாரியம் 12 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் தோட்ட வாரியம் 12 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், ஏரி வாரியம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாகவும்இருந்தது. இது தவிர பஞ்ச வரி வாரியம், பொன் வாரியம் ஆகியவையும் இருந்தது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேரில் தோட்ட வாரியத்திலும் ஏரி வாரியத்திலும் இருந்தவர்களில் படிப்பில் மேம்பட்டவர்கள் அல்லது முதியவர்கள் சம்வத்சர வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  மீதமுள்ளவர்களில் 12 பேர் தோட்ட வாரியத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு  தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று குழுவின் பெரிய மனிதர்கள் முழு 360 நாட்களும் பதவியில் இருந்து, பின்னர் ஓய்வு பெறுவார்கள். குழுவில் உள்ள ஒருவர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டதாக் கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக நீக்கப்படுவார். 


இவர்கள் ஓய்வு பெற்ற பிறகு குழுக்களை நியமிப்பதற்காக, உத்திரமேரூர் 12 தெருக்களில் உள்ள "நீதி மேற்பார்வைக் குழுவின்" உறுப்பினர்கள், நடுவர் உதவியுடன் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த தீர்வு ஆணையின் படி குடவோலைகள் குழுக்கள்  நியமிக்கப்பட வேண்டும். பஞ்சவாரிய குழு மற்றும் பொன் வாரியத்திற்கு 30 வார்டுகளில் குடவோலைகளில் பெயர்கள் எழுதப்பட்டு உரையில் இடப்பட்ட குட ஓலைகளுடன் கூடிய, 30 உறைகள் ஒரு பானையில் இடப்படும். 30 குட ஓலைகள் முன்பு விவரிக்கப்பட்ட படி கொடுக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 30 சீட்டுகளில் 24 பேர் பொன் வாரிய குழுவிலும் மீதமுள்ள ஆறு பேர் பஞ்சவர் பஞ்சவாரிய குழுவிலும் இடம்பெற வேண்டும். அடுத்த ஆண்டு இந்த இரண்டு வாரியங்களுக்கும் குடவோலை குலுக்கல் நடைபெறுகையில் இந்த குழுக்களில் ஏற்கனவே குறிப்பிட்ட ஆண்டில் பிரதிநிதித் துவப்படுத்தப்பட்ட வார்டுகள் விலக்கப்பட்டு, மீதமுள்ள வார்டுகளில் அக்கறைச் செலுத்துவர்.


இந்த குட ஓலை முறையின் வெளிப்படைத் தன்மை, நடுநிலைமை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவை இதன் சிறப்பாகக் கருதப்படுகின்றது. இது ஒரு முதிர்ச்சி அடைந்த உள்ளாட்சி நிர்வாக முறையாகக் கருதப்படுகிறது.

குடவோலை முறைக்கு பிறகு தேர்தல் முறைகளில் ஆங்கில ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.


சோழர் காலத்தின் (9-16ஆம் நூற்றாண்டு) குடவோலை முறைக்கு பிறகு, மன்னராட்சி காலத்தில் நேரடி தேர்தல் முறைகள் குறைந்து, நிலப்பிரபுத்துவ அமைப்புகள் மற்றும் உள்ளூர் குழுக்களின் அதிகாரம் வலுப்பெற்றது. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் நவீன வாக்குரிமை முறை அறிமுகமாகி, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலமான ஜனநாயக தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. 


குடவோலை முறை பெரும்பாலும் சோழர் காலத்தோடு (கி.பி 9-10) உச்சத்தை அடைந்தது, அதன் பிறகு உள்ளாட்சி அமைப்புகள் அரசரின் நேரடி கண்காணிப்பிலோ அல்லது நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டிலோ நிர்வகிக்கப்பட்டன.

 19-20ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியில், உள்ளாட்சி வாரியங்கள் மற்றும் சட்டமன்றங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாக்களிப்பு உரிமையுடன் கூடிய பிரதிநிதித்துவ முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு (1947), அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தற்போது தொழில்நுட்ப மாற்றம் பெரும்பங்கு வகிக்கிறது. பனை ஓலைகளில் பெயர்களை எழுதி பானையில் போடும் முறைக்கு பதிலாக, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நடந்து முடிந்த தொழில்நுட்பத் தேர்தலின் முடிவுகளை எதிர்நோக்கி இருக்கிறோம். முடிவுகள் நமதாகட்டும். 


(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்,

தமிழ்நாடு)