ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், சம்வப இடத்திலேயே 20 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. இன்று அதிகாலையில் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ மளமளவென பரவியதில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது.
இந்த பேருந்தில் மொத்தம் 41 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 21 பேர் தீப்பிடித்ததும் ஜன்னல்கள் வலியாக குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் எரிந்த உடல்களில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக டிஐஜி கோயா பிரவீன் கூறுகையில், இருசக்கர வாகனத்துடன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டாலும், பேருந்தின் உள்ளே இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பல மரணங்களுக்கு காரணமாக அமைந்தன. பேருந்தின் எரிபொருள் டேங்க் அப்படியே இருந்தது. இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்க அல்லது குறைக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பேருந்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.