Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)

Su.tha Arivalagan
Jun 03, 2026,12:34 PM IST

- பூரணவள்ளி சேகர்


கவிதா பார்ப்பதற்கு மிகவும் அழகான பெண். படிப்பிலும் படு சுட்டி. பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறாள்.


பல மாணவர்கள் அவளைப் பின் தொடர்ந்து வருவது எப்போதும் நடக்கும் செயல். அவள் அவர்களின் மேல் கவனம் செலுத்தாமல் தன் படிப்பின் மேல் கவனம் செலுத்தி வந்தாள்.


எப்போதும் எதிலும் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பாள். ஒரு நாள் அவளது பள்ளிக்கு கவிதாவின் தாயாருக்கு விபத்து ஏற்பட்டு  விட்டது என்று தொலைபேசியில் செய்தி வந்தது. தகவல் அறிந்த கவிதா மிகவும் கவலைப்பட்டு அழுது கொண்டு இருந்தாள்.


அடுத்த தெருவில் குடியிருக்கும் கண்ணன் என்பவர் கவிதாவை அழைத்துச் செல்ல இரு சக்கர வாகனத்தில் வந்தார். கண்ணன் பற்றிய நல்ல அபிப்பிராயம் கவிதாவின் வீட்டினர் இடத்தில் இல்லை.


கண்ணனைப் பார்த்த கவிதா ஒரு வினாடி யோசித்தாள். என் அம்மாவிற்கு என்ன ஆயிற்று என்று கண்ணனிடம் கேட்டாள் கவிதா.


காய்கறி வாங்கச் சென்ற போது இரு சக்கர வாகனம் மோதியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் உள்ள பெரிய மருத்துவமனையில்  சேர்த்திருக்கிறேன் என்று கண்ணன் கூறினான்.


அவனுடன் புறப்பட எத்தனித்த கவிதா தன் அம்மா சுய நினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டாள். ஆமாம் என்று கண்ணன் பதில் கூறினான்.




சுதாரித்த கவிதா என் அம்மா என்னை அழைத்து வர என்ன குழூஉக்குறி (Code Word) சொன்னார் என்று கேட்டாள்.

கண்ணன் ஒரு கணம் தடுமாறினான். பின் அதெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. உன்னை அழைத்து வரவே சொன்னார். உன் அப்பா வெளியூர் சென்று விட்டார் என்று சொன்னார் என்று கூறினான்.


கவிதாவின் அப்பா வெளியூரில் வேலை பார்ப்பது அனைவருக்கும் தெரியும். இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தாள்  கவிதா.


கவிதாவின் அம்மா அவள்  கொடுத்தனுப்பும் சோறு அதிலுள்ள காய், பூ ஆகியவற்றில் ஒன்றை குறிப்புச்  சொல்லாகப் பயன்படுத்த மகளுக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.


ஒவ்வொரு உணவிலிருந்தும் அது தொடர்பான பூ காய் பழம் ஆகியவற்றில் ஒன்றை உருவாக்கி இருவரும் புரிந்துகொள்ளும் விதமாக குழுச் சொல்லை பழக்கியிருந்தாள் கவிதாவின் அம்மா.


கவிதாவின் தந்தை வெளியூரில் வேலை செய்வதாலும் தன் பெண் குழந்தை ஏமாந்து விடக்கூடாது என்றும் கவிதா முன் ஜாக்கிரதையாக இருக்க பழக்கி இருந்தாள். அன்று புளிச்சோறு கொடுத்து அனுப்பி புளியம் பழம் என்பதை அம்மா கூறியிருந்தாள்.


அம்மா சுய நினைவுடன் இருந்தால்  குழுச் சொல்லைக் கூறியிருப்பார் என்று கவிதா நினைத்தாள். பள்ளி முடிந்ததும் தான் சென்று அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன் என்று திட்டவட்டமாகக் கூறினாள். 


பின் வகுப்பறைக்குள் வந்த கவிதா தன் ஆசிரியரின் கைபேசியில் தன் தாயை அழைத்தாள். தன் தாய் வீட்டில் இருப்பதை அறிந்து மனநிறைவு கொண்டாள். அம்மாவின் முன்னேற்பாடு தக்க நேரத்தில் உதவியது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)