நான் எப்பங்க பாஜகவில் சேர்ந்தேன்.. சேர்ந்தால்தானே விலகுவதற்கு.. லட்சுமி ராமகிருஷ்ணன்!

Su.tha Arivalagan
Jan 08, 2023,02:00 PM IST

சென்னை: நான் பாஜகவில் சேரவே இல்லை.. சேர்ந்தால்தானே விலகுவதற்கு என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த ஷோவை திறம்பட நடத்தி மிகவும் பிரபலமாக்கியவர். அது டிரண்ட்செட்டாகவும் மாறியது. அந்த ஷோவில் அவர்  அடிக்கடி சொல்லும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா மிக மிகப் பிரபலமான வார்த்தை.


திரைப்பட இயக்குநராகவும் இருந்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  சமீப காலமாக  பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.


இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் முக்தார் அகமதுவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே நான் அதிலிருந்து விலகி விட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் பாஜகவில் ஒரு போதும் சேர்ந்தது இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி அதிலிருந்து வெளியேறுவேன்..  தவறான செய்திகளை பரப்புவது, தவறான தகவல்களைப் பரப்புவதே தற்போதைய இதழியல் போக்காக மாறியுள்ளது.  பாஜக தலைவர் அண்ணாமலையின் விவாதம் சரியானதே.  பத்திரிகையாளர்களிடையே ஒரு ஒழுங்கு உருவாகாத வரை அவர்கள் அடுத்தவர்களை கேள்வி கேட்க தகுதி இல்லாதவர்களாகி விடுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.