லட்சோப லட்சம் பக்தர்களால் திண்டாடும் திருவண்ணாமலை.. காத்திருக்கும் தீபங்கள்!

Su.tha Arivalagan
Nov 24, 2026,03:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். 


இரவு முழுதும் பௌர்ணமி கிரிவலம் செய்த வண்ணம் இருந்தனர். கார்த்திகை தீப பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறும் இந்த 10 நாட்களும் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாட்கள் தெப்ப திருவிழாவும், சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.


சிவபெருமான் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக மிகப்பெரும் ஜோதியாக காட்சி தந்தார். இந்த நாளிலேயே "கார்த்திகை தீபத்திருநாள்" கொண்டாடப்படுகிறது. 


பரணி தீபம் :


இன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் மூலவர் கருவறை முன் மிகப்பெரிய கற்பூர கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி தீபாராதனை காட்டி அதில் ஒற்றை தீபம் ஏற்றினர். இந்த ஒற்றை தீபத்தால் நந்திமுன் 5 பெரிய அகல் விளக்கு ஏற்றினர். பின்பு அந்த ஐந்து தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் ஏற்றினர். அதன் பின் உண்ணாமலை அம்மன் சந்நிதியிலும் பெரிய அகல் விளக்கில்  தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை நடைபெற்றது.  




இந்த பரணி தீபம் இன்று அதிகாலை நடைபெற்றது.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைத்தனர். இதனை "ஏகன் அனேகன் ஆகி அனேகன் ஏகன் ஆகுதல்" தத்துவம் என்று கூறப்படுகிறது. பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதை இந்த நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.


இதில் உள்ள ஆன்மீக தத்துவம் யாதெனில் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களிலும் சிவபெருமான் ஒருவனே நிறைந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பரணி தீபம் சுவாமி கருவறை எதிரில் ஏற்றப்பட்டது. இந்த பரணி தீபத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.


மகா கார்த்திகை தீபம் சிகர நிகழ்வு :


இன்று மாலை 6:00 மணிக்கு 2668 அடி உயரமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மாலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீப மண்டபத்திற்கு எடுத்து வரப்படும். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் மாலையில் மலையின் உச்சியில் கார்த்திகை தீப உச்ச சிகர நிகழ்வான  மகாதீபம் ஏற்றப்படுகிறது.


"அண்ணாமலையாருக்கு அரோகரா"


திருவண்ணாமலை மகா தீபத்தை நேரில் கண்டு களிக்க இயலாதவர்கள் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியில் கண்டு சிவபெருமானை மனதார நினைத்து அவரவர் இல்லங்களில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 விளக்குகள், அதற்கு மேலும் அவரவர் வசதிக்கேற்ப தீபங்கள் ஏற்றுவது சிறப்பு.


சிவபெருமான் அனைவர் வாழ்விலும் இருளை அகற்றி ஒளி வீசட்டும்.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.