மக்களே உஷார்...2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்: 'தி லான்செட்' எச்சரிக்கை

Su.tha Arivalagan
Oct 12, 2026,11:37 AM IST

நியூயார்க் : காலநிலை மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாடு காரணமாக மனித சமுதாயம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உலகளாவிய ஆய்வுகளும் அறிவியல் தரவுகளும் எச்சரிக்கின்றன.   


2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்:


புகழ்பெற்ற 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் மனித இனம் பூமியிலிருந்து அழியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவையே இதற்கு முதன்மை காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 75 ஆண்டுகளில் உலக மக்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை இந்த அறிக்கை வரிசைப்படுத்தியுள்ளது. 


இதில் காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை மிக முக்கியமானவை. எனினும், இந்த அச்சுறுத்தல்கள் முற்றிய நெருக்கடிகளாக மாறுவதற்கு முன்பே, உலக நாடுகளின் அரசுகள் அவற்றைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பேரழிவைத் தவிர்க்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   


பசிபிக் பெருங்கடலில் கோர தாண்டவமாடும் எல் நினோ:




மற்றொருபுறம், புவி வெப்பமயமாதலின் கொடூர முகமாக பசிபிக் பெருங்கடலில் 'எல் நினோ' (El Niño) நிகழ்வு தீவிரமடைந்து வருகிறது. பசிபிக் பெருங்கடலின் Nino3.4 பகுதியில் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த மாதத்தில் வரலாற்று காணாத அளவாக 29.70°C ஆகப் பதிவாகியுள்ளது.


இது இதற்கு முன்னர் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய 1982, 1997 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பதிவான வலுவான எல் நினோ கால வெப்பநிலையை விட மிகவும் அதிகமாகும். எல் நினோ அதன் உச்சக்கட்டத்தை இந்த ஆண்டு டிசம்பரில் ஏற்படுத்தும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், உச்சகட்டத்தை அடைவதற்கு முன்பாகவே வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது உலக விஞ்ஞானிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்:


கடல் வெப்பநிலை அதிகரிப்பு, தீவிர பருவநிலை மாற்றங்கள், கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி என உலகளாவிய அச்சுறுத்தல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மனித குலத்திற்கு மும்முனைத் தாக்குதல் போல வந்துள்ளன. உலக நாடுகள் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கான சரியான வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.