Lashkar E Taiba: லஷ்கர் இ தொய்பா மூத்த தலைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
லாகூர்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரும், அந்த அமைப்பின் இணை நிறுவனருமான அமீர் ஹம்சா என்பவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. எதனால் இந்தக் காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
யாரேனும் வெளியிலிருந்து வந்து தாக்கினார்களா அல்லது வீட்டுக்குள் ஏதாவது அடிதடி நடந்ததா என்றும் தெரியவில்லை. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதி, லஷ்கர் அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகம்மது சயீத்தின் மிக நெருங்கிய நண்பன் ஆவார். மேலும் இந்த அமைப்பின் துணைத் தலைவரான அப்துல் ரஹ்மான் மக்கியின் நண்பனும் கூட.
அமீர் ஹம்சா குறித்து பாகிஸ்தான் அரசுத் தரப்பிலிருந்தோ அல்லது லஷ்கர் அமைப்பிடமிருந்தோ எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தாக்குதல் மற்றும் சதித் திட்டங்களில் இந்த ஹம்சாவும் முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளார். ஹபீஸ் முகம்மது சயீத்துக்கு அடுத்த இடத்தில் இந்த நபர் இருக்கிறார். லஷ்கர் அமைப்பின் பல்கலைக்கழக அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள் என பலவற்றிலும் இவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
லஷ்கர் அமைப்பின் பத்திரிகையிலும் ஆசிரியராக இவர் இருந்துள்ளார். பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கும் இந்த தீவிரவாத தலைவர் தலைமை வகித்து திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளதாக அமெரிக்க அரசுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.