இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

Su.tha Arivalagan
Mar 20, 2026,05:29 PM IST

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை சுமார் 1,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ள ஒரு அபூர்வமான மழை மேகக்கூட்டம் தற்போது வட இந்தியாவில் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.


பொதுவாக வளைந்து காணப்படும் மேற்கத்திய இடையூறு (Western Disturbance), இந்த முறை மிகவும் நீளமாகவும் நேர்க்கோட்டிலும் அமைந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைத் தாண்டி இந்தியாவின் உட்பகுதிகள் வரை பரவியுள்ளது.




இதன் காரணமாக டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட டெல்லி-என்சிஆர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 40 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் வெயில் அதிகரித்து வந்த நிலையில் இந்த மழையினால் வெப்பநிலை 3 முதல் 7 டிகிரி வரை குறைந்து மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.


மார்ச் 20-ம் தேதி வரை வடமேற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளான குல்மார்க் மற்றும் சோன்மார்க் ஆகிய இடங்களில் புதிய பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, சமவெளி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் திடீர் வானிலை மாற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.