lent 2026 கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம்...இந்த ஆண்டு துவங்கும் நாளும் சிறப்புகளும்
கிறிஸ்தவர்களின் முக்கிய ஆன்மீக நிகழ்வான தவக்காலம், சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் திருநாள் வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த 40 நாட்கள் (சில பிரிவுகளில் 46 நாட்கள்), இயேசு கிறிஸ்து மனித குலத்திற்காக சிலுவையில் சிந்திய ரத்தம், அவர் அனுபவித்த துன்பங்கள் மற்றும் அவரது தியாகத்தை நினைவு கூரும் புனிதமான காலமாகும்.
காலமும் கணக்கீடும் :
ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால பௌர்ணமிக்கு பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 18-ல் சாம்பல் புதனுடன் தொடங்கும் தவக்காலம், ஏப்ரல் 2-ல் பெரிய வியாழனுடன் நிறைவடைகிறது. இதன்பின் புனித வெள்ளி (ஏப்ரல் 3) கடைபிடிக்கப்பட்டு, ஏப்ரல் 5-ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
விரத முறைகள் :
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகள் மற்றும் இன்பங்களைத் தவிர்த்து, கடுமையான உபவாசத்தை மேற்கொள்கின்றனர். இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் பசியோடும் தாகத்தோடும் இருந்ததை இது நினைவுபடுத்துகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் விரத நாட்களாகக் கருதப்படுவதில்லை என்றாலும், பலர் ஈஸ்டர் வரை தொடர்ச்சியாக நோன்பு இருக்கின்றனர்.
புனித வாரம் (Holy Week) :
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக போற்றப்படுகிறது. இது மார்ச் 29-ல் குறுத்தோலை ஞாயிறுடன் தொடங்கி, ஈஸ்டர் வரை நீடிக்கும்.
பெரிய வியாழன்: இயேசுவின் இறுதி இரவு உணவு.
புனித வெள்ளி: சிலுவை மரணம் மற்றும் தியாகம்.
ஈஸ்டர்: இறப்பினை வென்று உயிர்த்தெழுதல்; இது புதிய வாழ்வின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
பெயர்க்காரணம் :
ஆங்கிலத்தில் 'Lent' எனப்படும் இச்சொல், 'Lencten' என்ற பழைய ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது, இதன் பொருள் 'வசந்த காலம்' என்பதாகும். இது ஆன்மீக ரீதியாக புத்துயிர் பெறுவதைக் குறிக்கிறது. கத்தோலிக்கர்கள் மற்றும் பல புரோட்டஸ்டன்ட் பிரிவினர் இதனைத் துக்கமான காலமாக மட்டுமன்றி, மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்பும் ஒரு வாய்ப்பாகவும் கருதுகின்றனர்.
இந்தத் தவக்காலம் என்பது வெறும் சடங்கல்ல; இயேசுவின் அன்பையும் தியாகத்தையும் உணர்ந்து, மனிதநேயத்தோடும் பிரார்த்தனையோடும் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு பயணமாகும்.