பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!

Swarnalakshmi
Sep 10, 2026,10:50 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை, ஆவணி 28 ஆம் நாள் 'விநாயகர் சதுர்த்தி' உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுள் விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை  சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

 

"பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு..

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து..

அழியாத பெருஞ்செல்வம் அவனே...

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு.."


நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது நமது பாரம்பரியம். ஏனெனில், பிள்ளையாரை நினைத்து தொடங்கும் செயல்களில் தடைகள் வராது. இது  மங்கலமான  தொடக்கத்தை குறிக்கிறது.இதன் வடிவம் சிவத்தையும்- சக்தியையும் குறிக்கும்.


விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதன் காரணம் என்ன? எப்பொழுதிலிருந்து கொண்டாடுகிறோம்  என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.


விநாயகர் சதுர்த்தி விழா தடைகளை நீக்கி,ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகர் பெருமானின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.


கொண்டாட்டம்:


 


இந்தியாவில் மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 10 நாட்கள் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, கனடா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


விநாயகர் சதுர்த்தி விழா எப்பொழுதிலிருந்து கொண்டாடப்படுகிறது:


மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் ஆவார்.


1893 ஆம் ஆண்டு "சர்வ ஜன கணேஷ் உத்சவ்"  என்ற பெயரில் இவர் விநாயக சதுர்த்தி விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த கொண்டாட்டங்களை மக்கள் மிகப்பெரிய விழாவாக  இந்த காலத்திலும்  கொண்டாடி மகிழ்கின்றனர்.


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதன் காரணம் என்ன?


இதற்கு ஒரு சிறிய புராணக்கதை உள்ளது. பார்வதி தேவி தன் உடம்பில் இருந்த அழுக்கில் இருந்து விநாயகரை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் அவருக்கு உயிர் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அரக்கர்களின்  கொடுமைகளில் இருந்து  தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்களும் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்து எறிந்த ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகர்.


இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தி அன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம்.  அதற்கு முக்கிய காரணம் விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக கருதப்படுவது ஆகும். விநாயகர்  அறிவு, செல்வம்,மற்றும் கல்வி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.


மேலும் விநாயகர் சதுர்த்தி சிறப்புகள் பற்றிய தகவல்களை அடுத்த பதிவிலும் அறிந்து கொள்வோம். இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.