அறுசுவை தாமு அண்டத்தில் சேர்ந்தார்!

Su.tha Arivalagan
Oct 25, 2026,03:28 PM IST
- எம். கே. திருப்பதி திருப்பூர்.

நவீன நளன் 
பரிசாரக கலையின் 
பிதாமகன் 
சமைக்க மறந்து 
இமைக்க மறந்து 
சவமாகிப் போனார் 

சத்தியத்தில் கலந்து 
நித்தியம் ஆனார்!

உணவால் உயிரூட்டி 
களைத்துப்போன நீ 
ஏனோ இன்று 
உடலால் உணர்வூட்டி 
நிலைத்துப் போனாய்!

நாவுக்கு சுவையூட்டிய 
உன் தேகம் - இன்று 
சாவுக்கு 
சுவையூட்டியது!

நீ உரித்த வெங்காயத்தில் 
கலங்கிய கண்கள்
இப்போது - நீ 
மரித்த செய்தியில் 
குளமாகின!



கடுகு பொறித்தவன் 
காடு போனாயா?
உளுந்து பொறித்தவன் 
ஊமை ஆனாயா?

L. E. D. திரையின் 
இருட்டுகளுக்கு 
மின்னோட்டம் இட்ட
மசாலா நாயகன் 
மறைவுக்கு...

எலக்ட்ரானிக்ஸ் கண்களும் 
ஏகத்துக்கு அழுது 
சோகத்துக்கு 
துணை தேடும்!

அந்த 
குள்ள உருவத்துக்கு 
நல்ல உருவத்துக்கு 
நாலு சொட்டு கண்ணீர் 
நானும் வடிக்கிறேன்!

அண்ணார்
தாமுவின் நினைவுகள் 
மனதில் நீங்காமல் 
மயிலாசனம் போட்டுகொண்டது!

(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)