பறவைகள் பலவிதம்.. ஆர்வலர்களுக்கு ஓர் அன்ரபான வேண்டுகோள்!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
பறவை இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும்.
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 14 (இன்று) தொடங்கி 17 வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் எங்கிருந்து வேண்டுமானாலும் குறைந்தது 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்து அடையாளம் கண்டு எண்ணிக்கையைக் கணக்கிட்டு eBird இல் உள்ளிட்டால் நீங்களும் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பேருவகையைப் பெறலாம்.
இதில உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் என அனைவரையும் சேர்த்துக் கொண்டு தெரியாதவர்களுக்கும் சொல்லித் தரலாம். நீங்கள் பறவைகள் பார்க்கத் தேர்ந்தெடுப்பது நீர்நிலையாக இருந்தால் இன்னும் சிறப்பு.
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் போதே ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்புக்கும் பங்களிக்கலாம். நாம் ஒவ்வொருவரும் ஒரு நீர்நிலையைக் கணக்கெடுத்தால்கூட எளிதாக 500க்கும் மேற்பட்ட நீர்நிலைகளைக் கணக்கெடுக்கலாம்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் நாம் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் புதிய பறவைகளின் வருகைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் அதிகமாக இனப்பெருக்கமாகும் பறவை இனங்களையும்,அழிந்து கொண்டு வரும் பறவை இனங்களையும் நாம் தெரிந்து கொண்டு அவற்றை பாதுகாப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
பறவைகள் மூலம்தான் பல செடி, கொடி, மரங்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது . பறவைகளுக்கு தினமும் தண்ணீர் மற்றும் தானியங்களை வைப்போம். நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வோம். நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம். சிந்திப்போம்! செயல்படுவோம்!!
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!