Wednesday Motivation: போகலாம் ரைட்....!
- கவிஞர் க. முருகேஸ்வரி
ஒருவர் சின்னதாக ஏதாவது சாதித்து விட்டால் போதும்.....
ஆமாம்... இதெல்லாம் ஒரு விஷயமா? நானா இருந்தா வேற லெவல்ல செய்திருப்பேன் .....
இது எம்மாத்திரம்.. நான் என்னவெல்லாம் பண்ணியிருக்கேன் ...... தெரியுமா?
குறிப்பாகப் பெண்களுக்கு இதுக்கும் மேல ஒருபடி போய் வேற வேலை வெட்டி இருந்தா தானா? வீட்டுல வேலை இல்லை போல..... என்று மனதை நோகடிக்கும் வார்த்தைகளும் வந்து போகும்.... (யப்பா.... எங்களுக்கும் எல்லா வேலையும் இருக்கு. நாங்க மல்ட்டி பெர்ஷனாலிட்டி....ஒரே நேரத்தில எல்லா வேலைகளையும் செய்வோம்)
வரும் தடைகளை எல்லாம் உடைத்து மனம் தளராமல் இலக்கை நோக்கி ஓடி.... அதை சாதிக்க அவர்கள் கொடுத்த உழைப்பு அவர்களுக்கு தான் தெரியும்....
அது எல்லாம் தெரிந்தும் தான் சிலர் இது போன்று பிதற்றுவார்கள்.
தானும் செய்ய மாட்டார்கள் (செய்ய தெரியாது) .. அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள்....
பொறாமை ஒன்றை மட்டுமே சுமந்து கொண்டு வயிற்றெரிச்சலில் வார்த்தைகளை வாரிக் கொட்டுவார்கள்...
சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் வாரியும் விடுவார்கள்....
அட சீ....போ.... என்று நம்மை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் நாலா பக்கமும் கற்களும் முட்களும் வந்து கொண்டே தான் இருக்கும்......
நமக்குப் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அனைவரும் இந்த வரிசையில் இருப்பார்கள்...
இத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாண்டி அன்றாட வேலைகளையும் செய்து விட்டு இடையே தனக்குப் பிடித்த துறையில் சாதனை படைக்கும் பெண்கள் போற்றப் பட வேண்டியவர்கள் தான்....
நமக்கு நாமே உற்சாகம் கொடுத்துக் கொண்டே நம்மை நாமே கொண்டாட வேண்டியது தான்......
யார் என்ன சொன்னாலும் அடுத்த கணம் அதை மறந்து விட்டு நம் வேலையை மற்றவர்களை விட சிறப்பாக நாம் செய்ய வேண்டும். உழைப்பிற்கான பலன் கடவுளின் ஆசிர்வாதத்தால் கட்டாயம் நமக்குக் கிடைக்கும்.
இன்னும் சொல்லப்போனால் உங்களை மட்டுமல்லாமல் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சாதிக்க தூண்டுங்கள்.
அது இன்னும் பேரானந்தத்தைத் தரும்.
முடிவாக நான் சொல்ல வருவது என்னவென்றால்
.. இது போல் உளறும் நல்லவர்களைப் பார்த்து "ஆடத் தெரியாதவனுக்கு தெருக்கோணலாம்"
என்று சொல்லிவிட்டு .. போகலாம் ரைட்....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).